

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரசாயன கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் குன்னூரில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கால்சியம் கார்பைடு கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைத்த 25 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகளுக்கு தலா ரூ.1000 வீதம் அபராதம் மற்றும் எச்சரிக்கை நோட்டீசுகளும் வழங்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மாம்பழ சீசனில் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வியாபாரிகளில் ஒரு சிலர் ரசாயன கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இத்தகைய முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் வெளிப்படையாக கவர்ச்சியாக மஞ்சள் நிறத்தில் தோன்றினாலும், அவற்றின் உள்ளமைப்பில் இயல்பான சுவை-மணம் குறைவாக இருக்கும்.
மேலும் மாம்பழத்தை பழுக்க வைப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயன கற்களில் இருந்து வெளிவரும் அசெட்டிலீன் வாயு, மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
எனவே மாம்பழங்களை வாங்கும்போது மிக அதிக மஞ்சள் நிறம் மற்றும் ஒரே மாதிரியான தோற்றம் உள்ள பழங்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
இயற்கையான மணம் உள்ளதா என்று சோதித்து பார்த்து வாங்க வேண்டும். முடிந்தவரை நம்பகமான விற்பனையாளர்களிடம் இருந்து மாம்பழங்களை வாங்கலாம்.
மேலும் இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.