

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதி கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் பாத்ரூம் வசதி இல்லாததால் சிறுமி தினமும் அதிகாலையில் அங்குள்ள வயல் வெளியில் காலைக்கடன் கழிக்க செல்வது வழக்கம்.
இதனை காரைத்திட்டு பகுதியை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் மகேஸ்வரன் (வயது20), அவரது நண்பர் அஜய் (27) ஆகிய 2 பேரும் நோட்டமிட்டு வந்தனர்.
சம்பவத்தன்று அதிகாலை சிறுமி காலைக் கடன் கழிக்க சென்றபோது மகேஸ்வரன், அஜய் ஆகியோர் சிறுமியை பின் தொடர்ந்து வந்தனர். இதனை கவனித்துவிட்ட சிறுமி கூச்சல் போட்டார்.
உடனே 2 பேரும் அந்த சிறுமியை மிரட்டி அவரது வாயில் துணியை அடைத்து வலுக்கட்டாயமாக கடத்தி அருகில் உள்ள வீட்டு மொட்டை மாடிக்கு தூக்கி சென்றனர். அங்கு இருவரும் மாறி மாறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
எனினும் சிறுமி அவர்களின் பிடியில் இருந்து விடுபட போராடினாள். உடனே சிறுமியை தலையில் கட்டையால் தாக்கிவிட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதற்கிடையில் வெளியில் சென்ற மகள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தந்தை அவரை தேடி வயல்வெளி பகுதிக்கு சென்றார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் உங்கள் மகள் இந்த வழியாகத்தான் சென்றார் என கூறினர். சந்தேகம் அடைந்து அருகில் இருந்த வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அந்த சிறுமி அலங்கோலமாக மயக்க நிலையில் கிடந்ததை கண்டு பதறியபடி அவரை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தந்தை புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் காரைத்திட்டு பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த மகேஸ்வரன், அஜய் இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் திருக்கழுக் குன்றத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அஜய் மரக்காணத்தில் உள்ள இறால் பண்ணையில் கூலி வேலை செய்து வருகிறார். தீவிர விசாரணைக்கு பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.