

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள செங்கோடி புல்லானிவிளை பகுதியை சேர்ந்தவர் ரிங்கில் ஜெயக்குமார். கூலித் தொழிலாளி. இவரது மனைவி நிர்மலா சுனிதா. இவர்களுக்கு 15 வயதான ரினோஷியா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ரினோஷியா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நிர்மலா சுனிதா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் திடீரென இறந்துவிட்டார். அவரது மறைவுக்கு பிறகு, ரிங்கில் ஜெயக்குமார் தனது 2 குழந்தைகளையும் மிகுந்த சிரமத்திற்கு இடையே வளர்த்து வந்தார். இதற்கிடையே நிர்மலா சுனிதா இறந்ததில் இருந்தே, அவரது மகள் ரினோஷியா மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தாயை மறக்க முடியாமல் தவித்த அவர், தாங்கள் வசித்து வரும் வீட்டை விட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தனது தந்தையிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்திருக்கிறார். அது தொடர்பாக தந்தைக்கும், மகளுக்கும் இடையே அவ்வப்போது தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் ரிங்கில் ஜெயக்குமார் வழக்கம் போல் வேலை நிமித்தமாக வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். பள்ளிக்கு சென்றிருந்த மாணவி ரினோஷியா மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
தந்தை வெளியே சென்றிருந்ததால் வீட்டில் மாணவி மட்டும் இருந்தார். அப்போது மாணவி ரினோஷியா வீட்டின் பின்வாசல் பகுதியில் உள்ள கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தநிலையில் ரிங்கில் ஜெயகுமார் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக தனது மகளை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரினோஷினா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து ரிங்கில் ஜெயக்குமார் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி ரினோஷியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் உடல் ஆசாரிப்பள் ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. தாய் இறந்த மனவேதனையில் மாணவி தற்கொலை செய்திக்கலாம் என்று கருதப்படுகிறது.
அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி, அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.