மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொன்ன பள்ளி தலைமை ஆசிரியை தலைமறைவு

பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு திடீரென கடந்த 21-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிச்சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் சம்பந்தப்பட்ட பாலக்கரை பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.
மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொன்ன பள்ளி தலைமை ஆசிரியை தலைமறைவு
Published on

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி பாலக்கரையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக கீதா ராணி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 35 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவ-மாணவிகளும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு திடீரென கடந்த 21-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அந்த மாணவர் டாக்டரிடம் கூறும்போது:-

தான் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்ததாகவும், அப்போது கொசு கடித்ததாகவும் கூறியுள்ளான். மாணவன் சொன்னதைக் கேட்டு பதறிப்போன அவருடைய தாய் இது குறித்து ஈரோடு கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். இதை அடுத்து கலெக்டர் இது பற்றி விசாரணை நடத்த கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிச்சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் சம்பந்தப்பட்ட பாலக்கரை பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளியில் படிக்கும் 6 மாணவர்களை தலைமை ஆசிரியை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது தெரிய வந்தது.

மேலும் அதிகாரிகள் விசாரணை நடத்த வந்தபோது தலைமை ஆசிரியை கீதாராணி பணிக்கு வராமல் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. இதற்கிடையே அதிகாரிகள் விசாரணை நடத்த வந்ததை அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதி பொதுமக்களும் பள்ளியில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதாராணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தொடக்கக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கழிப்பறையை சுத்தம் செய்ததால் கொசு கடித்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பெருந்துறை போலீசார் தலைமை ஆசிரியை கீதா ராணி மீது குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபத்தான ரசாயனங்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தலைமை ஆசிரியை கீதாராணியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com