

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சுமார் 90 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
நீண்டநாட்கள் ஆனதால் இப்பள்ளியின் சுற்றுசுவர்கள் வலுவிழந்து ஆங்காங்கே விரிசலும் காணப்பட்டு வந்துள்ளது. சில பகுதிகளின் சுவர்களும் விழுந்துள்ளது. இதுகுறித்து பலமுறை பெற்றோர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி காலை அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தண்டபானி - அபிராமி தம்பதியரின் 3 வயது பெண்குழந்தை தாரிகா பள்ளி நுழைவு வாயில் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது தடுப்பு சுவரின் முன்பகுதி திடிரென்று இடிந்து சிறுமி மீது விழுந்துள்ளது.
இதில் சிறுமியன் வயிறு மற்றும் இடுப்பு பகுதி நசுங்கி அவர் பலத்த காயமடைந்துள்ளார். உடனே சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிறுமி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஊர் கவுண்டர் பழனிமுத்து கூறுகையில், பள்ளியின் சுற்று சுவர் ஆபத்தான நிலையில் உள்ளது, இதனை சீரமைக்க கோரி பலமுறை ஆட்சியரிடமும், அதிகாரிகளிடமும் மனு அளித்தும் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இச்சம்பவம் நடந்துள்ளது.
பள்ளி வேலை நாட்களில் இது போன்று நடந்திருந்தால் அதிக அளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
இதற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஊர் மக்கள் ஒன்று கூடி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.