சாத்தான்குளம் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்யாத மத்திய, மாநில அரசுகள்... தீர்ப்பு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலைவழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்யாத மத்திய, மாநில அரசுகள்... தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு
Published on

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் நேர கட்டுப்பாட்டை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்ததாக கூறி சாத்தான்குளம் போலீசார் இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

அங்கு இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் தந்தை-மகன் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்த நாளில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் தந்தை-மகன் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், பால்துரை, தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10பேர் மீது வழக்குப்பதிவு செய்து மதுரைமத்திய சிறையில் அடைத்தனர்.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் சிறையிலேயே உயிரிழந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. உயர் நீதிமன்ற கண்காணிப்பில் நடந்த இந்த வழக்கில் தற்போது சி.பி.ஐ. 1500 பக்கங்கள் அடக்கிய குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.

வழக்கு விசாரணையின்போது சிறையில் இருந்த 9 காவலர்களும் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தனர். ஆனால் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள் என சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இதனால் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை 9 பேரும் சிறையில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த 23-ந்தேதி மாவட்ட நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு கூறினார். அதில் ஜெயராஜ்-பெனிக்ஸ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 9 பேரும் குற்றவாளிகள். இவர்களுக்கு தண்டனை வழங்குவது சம்பந்தமாக சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள காவலர்களின் மனநலம், உடல்நிலை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 30-ந்தேதி (இன்று) தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக காவலர்கள் 9 பேருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உடல்-மனநலம் குறித்து சோதனை நடந்தது. இன்று காலை 10 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படாததால் தீர்ப்பு ஏப்.2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனையா, ஆயுள் தண்டனையா, வாழ்நாள் சிறையா என முடிவெடுக்கவே அறிக்கை தாக்கல் செய்யக் கூறினோம். எந்த கருத்தாக இருந்தாலும் அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள் எனக்கூறி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com