என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சேறும், சகதியுமாக மாறிய ஏற்காடு மலைப்பாதை
சேலம்-ஏற்காடு போக்குவரத்து 2-வது நாளாக நிறுத்தம்: மலை கிராமங்கள் துண்டிப்பு
- ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவும் உள்ளதால் கடுமையான குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
- ஏற்காடு மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதையொட்டி கடந்த 1-ந் தேதி காலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் 144 மி.மீ. மழையும், 2-ந் தேதி காலை 6 மணி வரை 238 மி.மீ. மழையும், 3-ந் தேதியான இன்று காலை 6 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 98.2 மி.மீ. மழையும் பெய்துள்ளது. தொடர்ந்து ஏற்காட்டில் பெய்து வரும் கன மழையால் ஏற்காடு மலை பாதை உள்பட பல இடங்களில் திடீர் நீர் வீழ்ச்சி ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவும் உள்ளதால் கடுமையான குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
ஏற்காட்டில் அருவியில் இருந்து கொட்டும் தண்ணீர், தொடர்ந்து பெய்த கன மழையால் ஏற்காடு மலைப்பாதையில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு மலைப்பாதையில் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 40 அடி பாலப்பகுதியில் நேற்று முன்தினம் மண் சரிவு ஏற்பட்டது. இதனை நெடுஞ்சாலை துறையினர் சரி செய்தனர்.
ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள அருவியில் தண்ணீர் கொட்டுகிறது - ஏற்காடு மலைப்பாதையில் கற்கள், மண் சரிந்து கிடக்கும் காட்சி.
இந்த நிலையில் நேற்று சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள 60 அடி பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள சாலையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதம் அடைந்துள்ளது. இதனை சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 2-வது நாளாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகனங்கள் குப்பனூர் பாதையில் சென்று வருகின்றன. குப்பனூர் சாலையிலும் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அதனை அதிகாரிகள் உடனே அகற்றி உள்ளதால் வாகனங்கள் சென்று வருகின்றன. குப்பனூர் பாதையிலும் கன ரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்காட்டில் தொடர் மழை காரணமாக ஏற்காட்டில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பல சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் ஏற்காட்டில் தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஏற்காடு மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார். தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
மேட்டூர் பகுதியில் நேற்று இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக சேலம் கேம்ப் பகுதியில் உள்ள மலைப்பாதை சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது அதிர்ஷ்டவசமாக எந்த வாகனங்களும் வரவில்லை. இதனால் அசம்பாவித சம்பங்கள் ஏற்படவில்லை. மலை பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் அந்த வழியே வாகனங்கள் செல்லாமல் இருக்க சாலையின் இருபுறமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் அமைத்தனர்.






