ஊட்டி ரோஜா கண்காட்சி தொடங்கியது- மலர்களால் உருவான அன்னம், இருவாச்சி பறவை

பூங்காவின் நுழைவு வாயிலில் ரோஜா மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி ரோஜா கண்காட்சி தொடங்கியது- மலர்களால் உருவான அன்னம், இருவாச்சி பறவை
Published on

கோடை சீசனை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோடைவிழா என்ற பெயரில் மலர் கண்காட்சி, பழ கண்காட்சி, ரோஜா கண்காட்சி என பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடைவிழா இன்று ஊட்டி விஜயநகரம் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியுடன் தொடங்கியது.

ரோஜா கண்காட்சியை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தொடங்கி வைத்து, அங்கு மலர்களால் வடிவமைக்கப்பட்டு இருந்த பறவை உருவங்களை பார்வையிட்டார்.

ஒவ்வொரு ஆண்டு ரோஜா கண்காட்சியின் போது ஏதாவது ஒரு பொருளை மையப்படுத்தி அதுகுறித்த உருவங்கள் பூங்கா வளாகத்திற்குள் வைக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பறவையினங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சியையொட்டி 2 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வகையிலான பறவை இனங்கள் உருவாக்கப்பட்டு பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன. பூங்காவின் நுழைவு வாயிலில் ரோஜா மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியில் 80 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு அன்னப்பறவை, 20 ஆயிரம் ரோஜா மலர்களை பயன்படுத்தி ஹொர்ன் பில் பறவை, 20 ஆயிரம் ரோஜா மலர்களால் கழுகு, இருவாச்சி பறவை, புல்புல், ஹங்கரி பறவை உள்பட 14-க்கும் மேற்பட்ட பறவை இனங்களின் வடிவங்கள் உருவாக்கப்பட்டு பூங்கா வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மலர்களால் சிறிய வகை அலங்காரங்கள், ரங்கோலி மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க வசதியாக இரு இடங்களில் செல்பி ஸ்பாட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பூங்கா முழுவதும் 4 ஆயிரத்து 310 வகை ரோஜா இனங்களில் 33 ஆயிரம் ரோஜா செடிகள், மலர் தொட்டிகளில் பூத்து குலுங்குகின்றன. சிவப்பு, வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு என பல வண்ண ரோஜா மலர்களுடன் ரோஜா பூங்கா கண்ணை கவர்கிறது.

இன்று தொடங்கிய கண்காட்சியானது வருகிற 18-ந் தேதி(திங்கட்கிழமை) வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. கண்காட்சி தொடங்கியதை அடுத்து இன்று காலை முதலே ஊட்டி ரோஜா பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர்.

அவர்கள் பூங்காவில் பல வண்ணங்களில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களை பார்த்து ரசித்ததனர். மேலும் பூங்காவில் பல வண்ண ரோஜா மலர்களால் உருவான அன்னப்பறவை, இருவாச்சி, புல்புல், தேன்சிட்டு, கழுகு உள்ளிட்ட பறவை வடிவமைப்புகளையும் கண்டு ரசித்ததுடன், அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com