

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் மீனவர் பகுதி, வாயலூர் உயாலிகுப்பம் மீனவர் பகுதி அடுத்தடுத்து உள்ளன. 2 பகுதிகளின் எல்லை எந்த மீனவர் பகுதிக்கு உரியது என பிரச்சனை இருந்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி 2 கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மயான கொள்ளை விழா நிறுத்தப்பட்டது. இதில் இரு தரப்பு, மீனவர்களும் கைது செய்யப்பட்டதால் கடந்த 2 மாத காலமாக மீனவர்கள் மற்ற கைதுக்கு பயந்து தலைமறைவாக இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது கைதான மீனவர்கள் ஜாமீன் பெற்று வெளியே வந்து உள்ளனர். இந்நிலையில் இந்த மீனவர் பகுதியில் தங்கள் பகுதி எதுவரை வருகிறது என அதிகாரிகள் கணக்கீடு செய்து பெயர் பலகை வைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை வலியுறுத்தி இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என கூறி இன்று காலை புதுப்பட்டினம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 800-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கடற்கரையில் அமர்ந்து கைகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதனால் புதுப்பட்டினம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக மீனவர்கள் அறிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.