

அன்றும், இன்றும் மக்கள் நாயகன் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ராமராஜன். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக, விசுவாசியாக, பக்தராக வலம் வந்த ராமராஜன், கடந்த 1980, 1990-ம் ஆண்டுகளில் உச்ச நட்சத்திரமாக திரையுலகில் ஜொலித்தார். அவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அதிலும் கிராமங்களை சேர்ந்த பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்த அவரது வாழ்விலும் அரசியல் வாசம் வீசத்தொடங்கியது.
தான் நடித்த திரைப்படங்களில் எல்லாம் அ.தி.மு.க.வின் கொடியை காண்பிக்க தவறியதில்லை. அதன் பிரதிபலனாக திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியின் எம்.பி. ஆனார். இந்தநிலையில் நடிகர் ராமராஜன் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி த.வெ.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ராமராஜன் கூறியதாவது:-
என்னுடைய அரசியல் தலைவர்கள் எப்போதுமே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தான். இன்றைக்கு த.வெ.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது என்னுடைய நன்றிக்கடன், கைமாறு. இது முழுவதும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. 2011 மற்றும் 2016-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்கள் மேற்கொண்டுள்ளேன். அந்த 10 ஆண்டுகளும் அம்மா மீது கொண்டிருந்த அன்பினால் கொடுக்கப்பட்ட பொறுப்புகள் எதனையும் தட்டிக்கழிக்காமல் செய்தேன்.
ஆனால், 2016-ல் அவரது மறைவுக்கு பிறகு எனக்கான முக்கியத்துவம் என்பது அக்கட்சியில் கிடைக்கவில்லை. எந்த பொறுப்பும் இல்லாமல் எப்படி பணியாற்றுவது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. தேர்தல் காலங்களில் மட்டுமே என்னை பயன்படுத்திக் கொண்டதால் நான் அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கி விட்டேன்.
என்னுடைய திரை வாழ்வில் நீண்ட காலத்துக்கு பின்னர் 45-வது படமாக வெளியான சாமானியன் படம் பல இடங்களில் சரியாக ரிலீஸ் ஆகாத நிலையில் ஆலங்குளம் தியேட்டரில் மட்டும் மக்களின் பேராதரவுடன் ஓடியது. அப்போது நான் அந்த தியேட்டர் உரிமையாளரிடம், என்னுடைய திரைப்படத்தை பார்க்க வருபவர்கள் ஏழை, எளிய மக்கள். எனவே டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தபோது அதனை ஏற்றுக் கொண்டு கட்டணத்தை ரூ.50 ஆக குறைத்து 115 நாட்கள் அந்தப்படத்தை ஓடச் செய்தார். அதில் இருந்து இன்றுவரை எனக்கு பொருளாதார ரீதியாக பல வகையிலும் உதவி செய்தவர் அந்த தியேட்டர் உரிமையாளர். அதற்கு நன்றி கடனாக அவரது சகோதரர் மகனான த.வெ.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன்.
அது மட்டுமின்றி மேலூரில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளருக்கும் பிரசாரம் செய்ய இருக்கிறேன். 1975 முதல் 78 வரை மதுரை மேலூர் கணேஷ் தியேட்டரில் நான் வேலை பார்த்து வந்தேன். அந்த தியேட்டரின் உரிமையாளர் எனக்கு வாழ்வளித்ததோடு, சினிமாவில் நுழையவும் உதவி செய்தார். அந்த நன்றி கடனாக அவரது மகனுக்கு நான் வாக்கு கேட்டு பிரசாரம் செய்ய போகிறேன். இந்த இரண்டுமே என்னுடைய அரசியல் நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டது. விஜய்யின் எதிர்காலம் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.