நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை கொட்டியது.பாபநாசம் அணை நீர்மட்டம் 81 அடியாக உள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மதியத்திற்கு பிறகு வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீச தொடங்கிய நிலையில், மாலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக காக்காச்சியில் 5 சென்டிமீட்டரும், ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டில் 4 சென்டி மீட்டரும் மழை பெய்தது. மாவட்டத்தில் நாங்குநேரி,

ராதாபுரம், சேரன்மகா தேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் பாளையங்கோட்டையில் 18½ மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. டவுன், பேட்டை, சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அணைகளை பொறுத்தவரை 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 91½ அடியாக உள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 81 அடியாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் கனமழை பெய்தது. குறிப்பாக கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக குண்டாறில் 28 மில்லி மீட்டரும், அடவி நயினாரில் 17 மில்லி மீட்டரும், கருப்பா நதியில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சில மணி நேரம் விட்டு விட்டு சாரல் மழை அடித்தது. குற்றாலம் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி சுற்று வட்டாரத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. செங்கோட்டையில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு சுற்றுவட்டாரத்தில் இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில கிராமங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக கயத்தாறில் 9 சென்டிமீட்டரும், கடம்பூரில் 7 சென்டிமீட்டரும் மழை பெய்தது. எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், மணியாச்சி மற்றும் வேடநத்தம் பகுதிக ளிலும் பரவலாக மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com