சூறைக்காற்றுடன் மழை - 10,000க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை

சிறுமலை அடிவாரப்பகுதியில் இருந்த விலை உயர்ந்த மரங்களும் வேரோடு பிடுங்கி தூக்கி வீசப்பட்டது.
சூறைக்காற்றுடன் மழை - 10,000க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை
Published on

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. விவசாயக் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்ட சூழ்நிலையில் விவசாய பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் சிறிதளவு நீரை சொட்டு நீர் பாசனம் மூலம் பாய்ச்சி விவசாயம் செய்து வருகின்றனர். கடும் வறட்சியால் சமதளப் பகுதிகளில் புல், பூண்டுகள், செடிகள், காய்ந்து சருகுகளாக காட்சியளிக்கிறது. இதனால் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் இன்றி வைக்கோலை வாங்கி தீவனமாக போட்டு வருகின்றனர்.

இதனிடையே வழக்கம் போல் நேற்றும் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் சிறுமலை அடிவாரப் பகுதிகளில் கடும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்தக் காற்றும், மழையும் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. மேலும் ஐஸ் கட்டி மழையும் பெய்தது.

இந்த சூறாவளி காற்றினால் வெள்ளோடு, நரசிங்கபுரம், செட்டியப்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், சிறுமலை அடிவார பகுதிகளிலும் பயிரிடப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவ்வாழைகள் ஒடிந்து சாய்ந்தது. மேலும் பப்பாளி மரங்களும் அதிக அளவு சாய்ந்து சேதம் ஏற்படுத்தியது. இதை தவிர சிறுமலை அடிவாரப்பகுதியில் இருந்த விலை உயர்ந்த மரங்களும் வேரோடு பிடுங்கி தூக்கி வீசப்பட்டது.

இதுகுறித்து விவசாயி பீட்டர், அருள் ஆகியோர் கூறும்போது, சிறுமலை அடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களில் சுமார் 20 ஆயிரம் செவ்வாழைகள் பயிரிடப்பட்டு அவை அனைத்தும் தார் போட்டு பிஞ்சுகளாகவும், காய்களாகவும் இருந்தது. தற்போது பெய்த மழை மற்றும் சூறாவளி காற்றினால் வேரோடு சாய்ந்து விட்டது. தற்போது ஒரு செவ்வாழை தார் ரூ.500 முதல் ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 10,000 செவ்வாழைத்தார்கள் சாய்ந்துள்ளது. இதனால் ஒவ்வொரு விவசாயியும் சுமார் ரூ.2 முதல் ரூ.10 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே சிறுமலை அடிவாரப் பகுதிகளில் சாய்ந்து போன செவ்வாழை மற்றும் மரங்களை வெள்ளோடு கிராம நிர்வாக அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com