சாத்தான்குளம் வழக்கில் பாரபட்சம் பார்க்காமல் தண்டனை வழங்க வேண்டும்- மத்திய அரசு அறிக்கை

9 போலீசாருக்கும் தண்டனை விவரம் வருகிற திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
சாத்தான்குளம்  வழக்கில் பாரபட்சம் பார்க்காமல் தண்டனை வழங்க வேண்டும்- மத்திய அரசு அறிக்கை
Published on

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான 9 போலீசாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் மத்திய அரசு கூறி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.

இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது. கடந்த 23-ந்தேதி. 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை குறித்து மத்திய, மாநில அர சுகள் தங்கள் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு அறிக்கை இ-மெயிலில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 9 போலீசாருக்கும் தண்டனை விவரம் வருகிற திங்கட்கிழமை (அதாவது நாளை மறுநாள்) அறிவிக்கப்படும் என உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவம் மிகவும் கொடூரமானது. போலீஸ் நிலையத்தில் அவர்கள் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டது சி.பி.ஐ. விசாரணையில் உறுதியாகிறது.

எனவே இந்த வழக்கில் எந்த பாரபட்சமும் பார்க்கக்கூடாது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com