11 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தையால் பரபரப்பு: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் ஆடுகளை கடித்துக் கொன்றது சிறுத்தை என தெரிய வந்தது. வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தையால் பரபரப்பு: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதைப்போல் சிறுத்தை, புலிகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் ஏர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட காட்டடி அருகே உள்ள வேடர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் 15 ஆடுகள், 5 மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார்.

இன்று காலை எழுந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 11 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆடுகளின் கழுத்துகளில் மர்ம விலங்கு ஆழமாக கடித்த தடயங்கள் இருந்தன.

இதுகுறித்து ஏர்மாளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் ஆடுகளை கடித்துக் கொன்றது சிறுத்தை என தெரிய வந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயி ராஜா பலியான ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com