

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மஸ்தபாளி வனக்கோட்டத்தில், பருவமழைக்கு முந்தைய ஐந்து நாள் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது.
இதற்காக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஸ்தபாளி வனக்கோட்டத்தில் மட்டும் 34 பிரிவுகளாகப் பிரித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், மசினகுடி, கார்குடி, தெப்பக்காடு, முதுமலை மற்றும் எலியாஸ்கடை வனச்சரகங்களிலும் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கணக்கெடுப்பின்போது,
* நேரடி வனவிலங்கு கணக்கெடுப்பு
* கால்தடங்கள் உள்ளிட்ட அடையாளங்கள் பதிவு
* தாவரங்கள் தொடர்பான ஆய்வு
ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் மொபைல் செயலிகள் மற்றும் டேட்டா ஷீட்களில் நாள்தோறும் நேர குறிப்புகளுடன் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.
இந்த கணக்கெடுப்பு பணி வரும் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பருவமழைக்கு முந்தைய இந்த கணக்கெடுப்பு பணிகள் அந்தந்த வனச்சரக அலுவலர்களின் தலைமையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் மொத்தம் 284 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சேகரிக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் முறையில் ஆய்வு செய்து, வனவிலங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நடமாட்டம் குறித்து விரிவான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.