

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என். பாண்டியை ஆதரித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்காகப் பழனி நகரின் மின்வாரிய அலுவலகம் அருகே "இளைஞர் கலை விழா" என்ற பெயரில் நடக்கும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நான் இன்று உங்கள் முன்னே ஒரு நடிகனாக வரவில்லை. நடிகன் என்பது எனது தொழில், அதற்கான திறமையை வளர்த்துவிட்டு, டிக்கெட் எடுத்துப் படம் பார்த்து என்னை வாழ வைத்தவர்கள் நீங்கள். அந்த அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? நாட்டுக்கும் மக்களுக்கும் பிரச்சனை வரும்போது ஓடி வருவது ஒரு கலைஞனின் கடமை. அந்த அடிப்படையில் ஒரு வாக்காளனாக உங்களிடம் பேச வந்துள்ளேன்" என நெகிழ்ச்சியுடன் தொடங்கினார்.
இந்தத் தேர்தலை மூன்று மாடல்களுக்கான தேர்தலாகப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், "ஒன்று கல்வி மற்றும் மொழியைக் காக்கும் திராவிட மாடல்; இரண்டாவது தன்மானத்தை அடகு வைக்கும் அடிமை மாடல்; மூன்றாவது ஒரே நாளில் முதல்வர் ஆகத் துடிக்கும் சினிமா மாடல்" என வகைப்படுத்தினார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கடுமையாகச் சாடிய அவர், "பாஜக சொல்வது டபுள் இன்ஜின் சர்க்கார் அல்ல, அது வெறும் டப்பா சர்க்கார். தமிழ்நாட்டிற்குள் பாஜக என்கிற பாம்பைத் தங்களின் சுயநலத்திற்காக அதிமுக-வினர் உள்ளே இழுத்து வருகிறார்கள். தன்மானத்தைத் தூக்கிக் கொண்டு போய் மோடியின் காலடியில் வைக்கும் அடிமை மாடல் நமக்குத் தேவையா?" என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு ஒரு கிணறு போன்றது. அதில் தவளைகளாகிய நாம் நிம்மதியாக வாழ்ந்தோம். ஆனால், பதவி ஆசை பிடித்த எடப்பாடி பழனிசாமி போன்ற ஒரு தவளை, வெளியே சென்று 'பிஜேபி' என்கிற பாம்பைத் தமிழ்நாட்டிற்குள் அழைத்து வருகிறது. அந்தப் பாம்பு உள்ளே வந்தால் மற்ற தவளைகளை மட்டுமல்ல, அந்தப் பாம்பைத் தூக்கி வந்த தவளையையும் சேர்த்து விழுங்கிவிடும். இப்படித் தன்மானத்தை மோடியின் காலடியில் அடகு வைப்பதுதான் 'அடிமை மாடல்'" என ஆவேசமாகச் சாடினார்.
மேலும், "சினிமாவில் பெரிய ஹீரோவாகலாம், ஒரே படத்தில் முதல்வராகக் கூட நடிக்கலாம். ஆனால் நிஜ அரசியலில் அப்படி ஆக முடியாது. தமிழ்நாட்டின் மொழி, இனம் என பிரச்சனை வந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? மக்கள் காட்டும் அன்பைத் தப்பா பயன்படுத்தாதீர்கள். நடிகனைப் பிடித்தால் தொண்டையில் விரலை விட்டு விசில் அடிக்கலாம், ஆனால் நாட்டை கொடுக்க முடியுமா?" என ஆவேசமாகத் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை (Delimitation) குறித்துப் பேசிய அவர், தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாகவும், பெரும்பான்மையை வைத்து எதையும் தீர்மானிக்க நினைத்தால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்து. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மாற்றினால் தென்னிந்தியா அரசியல் அநாதையாக மாறும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. பெரும்பான்மையை வைத்துத்தான் எல்லாம் தீர்மானிக்கப்படும் என்றால், காகத்தைத்தான் தேசியப் பறவை ஆக்க வேண்டும், மயிலை அல்ல என்று அண்ணா அன்றே சொன்னார் என்றார்.