

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், பகல் நேரத்தில் கொளுத்தும் வெயில் மற்றும் அனல் காற்றால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்வதற்கே அச்சப்பட்டு வருகின்றனர்.
வீடுகளில் இருந்தாலும் மின் விசிறியின் காற்றும் அனல் வீசுவதால் முதியவர்கள், குழந்தைகள் துாங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. பகல் நேரங்களில் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகள் தர்பூசணி, எலுமிச்சை சாறு, பழச்சாறுகள் குடித்து சூட்டை தணித்து வருகிறார்கள். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின்வெட்டும் அதிகரித்து உள்ளது. திருவள்ளூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் தினமும் 10 முறைக்கு மேல் மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். வெப்பத்தின் தாக்கத்தால் வீடுகளுக்குள் இருக்க முடியாமல் புழுக்கத்தால் தவிக்கிறார்கள். இரவு நேர மின்தடையால் தூங்காமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. சீரான மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். வெயில் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான வீடுகள், கடைகள், அலுவலகங்களில் ஏ.சி. பயன்பாடு அதிகரித்து உள்ளது. இதனால் மின்தேவை உயர்ந்து உள்ளதால் மின்தடை ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.