தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு- தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு- தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது
Published on

தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. கருத்துக்கணிப்பு வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.

3 தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தற்போது கோடையின் வெப்பம் அதிகமாக இருந்தாலும், தலைவர்கள்- வேட்பாளர்களின் பிரசாரங்கள் அதனை விட அனல் கக்கியது.

தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கி உள்ளது. முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 31-ந் தேதி திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் மாவட்டங்களில் பிரசாரம், பொதுக்கூட்டம், ரோடு ஷோ ஆகியவற்றில் கலந்துகொண்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. அரசின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் பற்றியும் பேசினார். அதேபோல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பிரேமலதா, வைகோ, கி.வீரமணி, செல்வப்பெருந்தகை மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர். இந்த கூட்டணிக்கு வலுசேர்க்கும் விதமாக கடைசி நேரத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியும். பொன்னேரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்கு சேகரித்தார்.

அ.தி.மு.க. கடந்த 2021-ம் ஆண்டு இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் கண்டு உள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25-ந்தேதி மயிலாப்பூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தினமும் 2 அல்லது 3 இடங்களில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சியின் குறைகளை பட்டியலிட்டு பேசினார். அதோடு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பது குறித்தும் முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் செய்தார்.

இந்த கூட்டணிக்கு ஆதரவாக நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ். டி.டி.வி.தினகரன் ஆகியோர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தனர். இந்த கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் பா.ஜனதா முதல்-மந்திரிகளும் தமிழகம் வந்து வாக்கு சேகரித்தனர்.

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு முதல் தேர்தலில் ஆட்சியை பிடித்தது போல த.வெ.க.வும் இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்று கூறி களம் இறங்கி இருக்கிறது. அந்த கட் சியின் ஒரே நட்சத்திரமாக இருக்கும் விஜய், பல்வேறு மாவட்டங்களில் சென்று ரோடு ஷோ சென்றபடி வாக்கு சேகரித்தார்.

அவர் இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் நேரடி போட்டி நடக்கிறது. ஊழலை ஒழித்து, நேர்மையான அரசியலை முன்னெடுப்பேன் என்று கூறி ஆதரவு திரட்டி வருகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய், பெரம்பூரில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு அங்கேயே பிரசா ரத்தை தொடங்கினார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் அவர் சில தொகுதிகளில் வீடுகளுக்குள் சென்றும் வாக்கு சேகரித்தார்.

நாம் தமிழர் கட்சி தனது கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல், வழக்கம் போல் இந்த தேர்தலிலும் தனித்து களம் காண்கிறது. மற்ற கட்சிகள் செய்ய தயங்கும் காரி யத்தை. சீமான் துணிந்து தனது வேட்பாளர்கள் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கினார்.

காரைக்குடியில் சீமான் போட் டியிட்டாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அவரது பேச்சு அனல் பறந்தது. திராவிட கட்சிகளுக்கு மாற்று, சினிமா மோகம் வேண்டாம் என்ற அடிப்படையை கொண்டு பிரசாரம் செய்தார்.

இது தவிர சசிகலா-ராமதாஸ் இணைந்து அமைத்த கூட்டணிக்கு சசிகலா மட்டும் பல்வேறு தொகுதிகளில் சென்று பிரசாரம் செய்தார். ராமதாஸ் உடல் நிலை சரியில்லாத தால் பிரசாரம் செய்யவில்லை.

கோடையின் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஒட்டுவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சுமார் 20 நாட்களாக நடந்து வரும் இந்த அனல் பறக்கும் பிரசாரம், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. எனவே அதற்கு மேல் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

அதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், த.வெ.க. தலைவர் விஜய் சென்னை நந்தனத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்கள். சீமான் காரைக்குடியில் நிறைவு செய்கிறார்.

தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இதனையடுத்து தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடவும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி எந்தவித தேர்தல் கருத்துக்கணிப்பும் இன்று மாலை 6 மணிக்கு பிறகு வெளியிடக்கூடாது. அதேபோல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் மேற்கு வங்காள இறுதிகட்ட தேர்தல் முடிந்த பின்னர் வருகிற 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல்தான் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர். பணிகளின் போது சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே, ஏற்கனவே வாக்களித்து வருபவர்களே இந்த முறை வாக்களித்தாலும், தமிழகத்தின் வாக்கு சதவீதம் 85 சதவீதத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com