என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
- 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டன.
- கோவை கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் சிறப்பு நீதிபதி முன்பு 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், அருண்குமார், ஹேரன்பால், பாபு ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் கொடுத்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இதுவரை 50க்கும் மேற்பட்ட அரசு தரப்பு சாட்சியங்களிடம் விசாரணை நடந்துள்ளது. 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டன.
2 மாதத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
அரசு தரப்பு சாட்சியங்கள் முடிந்த நிலையில், இருதரப்பிடமும் கேள்விகள் கேட்டு பதில் பெறுவதற்காக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதற்காக குற்றம் சாட்டப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், அருண்குமார், ஹேரன்பால், பாபு ஆகிய 9 பேரும் சேலம் மத்திய ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் கோவை கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் சிறப்பு நீதிபதி முன்பு 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.
இதையடுத்து வழக்கு விசாரணையை 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






