நங்கநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: ‘இன்ஸ்டா’ பெண் பிரபலம் கொலையில் திடுக்கிட வைக்கும் பரபரப்பு தகவல்கள்

இன்றைய இளம் தலைமுறை பெண்கள் பலர் சேலை உடுத்துவதை மறந்து போய் இருக்கும் நிலையிலும் சந்தைகளில் ரெடிமேட் சேலைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது.
நங்கநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்:  ‘இன்ஸ்டா’ பெண் பிரபலம் கொலையில் திடுக்கிட வைக்கும் பரபரப்பு தகவல்கள்
Published on

சென்னை நங்கநல்லூரில் இஸ்டாகிராமில் பிரபலமான நாகலட்சுமி என்ற பெண் நேற்று முன்தினம் கொடூரமாக கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மனைவியை கொன்று விட்டு கணவர் சுப்பிரமணியனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவத்துக்கு பின்னணியில் திடுக்கிட வைக்கும் வகையில் பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட நாகலட்சுமிக்கு 42 வயது ஆகிறது. இவர் தன்னை விட 10 வயது மூத்தவரான நெல்லையை சேர்ந்த சுப்பிரமணியனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு பரத்வாஜ், சைலாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

சுப்பிரமணியனுக்கு சரியான வேலை எதுவும் இல்லாத நிலையில் நாகலட்சுமிக்கு ஆடைகள் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக அவருக்கு பிடித்த உடையான சேலை விற்பனையில் ஈடுபட தொடங்கினார். இதற்காக நங்கநல்லூர் மற்றும் அண்ணாநகரில் 2 சேலை விற்பனை கடைகளை அவர் நடத்தி வந்தார்.

நாகலட்சுமியின் இந்த தொழில் ஆர்வம் அவரை ஆன்லைன் மூலமாக சேலை வியாபாரத்திலும் தள்ளியது. இன்றைய பெண்கள் மத்தியில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நாகலட்சுமி இணைந்தார்.

நங்கநல்லூர் ஸ்ரீசாய் சில்க்ஸ் ரெடிமேட் சேலைகள் மொத்த மற்றும் சில்லரை விற்பனை என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி அதன் மூலமாக தினமும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

இன்றைய இளம் தலைமுறை பெண்கள் பலர் சேலை உடுத்துவதை மறந்து போய் இருக்கும் நிலையிலும் சந்தைகளில் ரெடிமேட் சேலைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி தனது கடைகளில் ரெடிமேட் சேலைகளை அதிகளவில் நாகலட்சுமி விற்பனை செய்து வந்து உள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள் மூலம் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலைகளை கட்டுவது எப்படி? தைப்பது எப்படி? என்பதை சொல்லி கொடுத்து வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நாகலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3½ லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்த்து நங்கநல்லூர் மற்றும் அண்ணாநகர் கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான சேலைகளை தேர்வு செய்தனர்.

இதன் மூலம் சேலை விற்பனையில் நாகலட்சுமிக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளது. இதை வைத்து 2 மகன்களையும் அவர் நன்றாக படிக்க வைத்துள்ளார்.

மூத்த மகன் பரத்வாஜ் ரஷியாவில் டாக்டருக்கு படித்து வரும் நிலையில் இளைய மகன் சைலாஷ் சென்னையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் தொடர்பான படிப்பை படித்து வருகிறார்.

இதுபோன்ற சூழலில்தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் நாகலட்சுமியை அவரது கணவர் சுப்பிரமணியன் கொடூரமாக கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் வேலை எதுவும் இல்லாமல் சுற்றி திரிந்த சுப்பிரமணியன் தன்னை விட மனைவி அதிகமாக பணம் சம்பாதிக்கிறாளே? என்கிற ஏக்கத்தில் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் மனைவி இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிடுவதிலும் சுப்பிரமணியனுக்கு விருப்பம் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இருப்பினும் கணவருக்கு நாகலட்சுமி ஓட்டல் வைத்து கொடுத்துள்ளார். ஆனால் அதனை சரியாக நடத்தாததால் லட்சக்கணக்கில் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மனைவியுடன் அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு நங்கநல்லூரில் இருந்து சுப்பிரமணியன் மதுரைக்கு சென்று விட் டார். அங்கு தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்த அவர் அவ்வப்போது மனைவியுடன் பேசியும் வந்துள்ளார்.

சுப்பிரமணியனின் செலவுகள் அனைத்தையும் நாகலட்சுமியே பார்த்து வந்துள்ளார். அவர் கேட்கும் போதெல்லாம் வங்கி கணக்கில் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும் சுப்பிரமணியன் சென்னைக்கு வந்து 1 அல்லது 2 நாட்கள் நாகலட்சுமியுடன் தங்கும்போது தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னரும் சுப்பிரமணியன் நாகலட்சுமியை பார்ப்பதற்காக நங்கநல்லூர் வந்துள்ளார். அப்போது மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் மதுரைக்கே சென்று விடுங்கள் என்று மனைவி கூறியுள்ளார். ஆனால் இந்த முறை மதுரைக்கு திரும்பி செல்லாமல் மனைவியை கொன்று விட வேண்டும் என்கிற சைக்கோ தனமான முடிவுக்கு சுப்பிரமணியன் வந்துள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட சுப்பிரமணியன் வீட்டை விட்டு வெளியில் சென்று அரிவாள் ஒன்று வாங்கி வந்து நாகலட்சுமியை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதே நேரத்தில் நாகலட்சுமியின் உறவினர்களும் கண்ணீரில் மூழ்கி உள்ளனர். ரஷியாவில் மருத்துவ படிப்பு படித்து வரும் மகன் பரத்வாஜ் சென்னை வருகிறார். குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

கொலை செய்வதற்கு பெரிய அளவில் காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நாகலட்சுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்ஸ்டாகிராமில் அவரை தொடர்ந்து பின்பற்றும் லட்சக்கணக்கானோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அவரது ஜவுளி கடைக்கு வாடிக்கையாளர்களாக இருந்த பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் அது பற்றி மிகுந்த வருத்தத்தோடு கூறி வருகிறார்கள்.

நாகலட்சுமியின் கொடூர மரணம் அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com