மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி: 4 மாத கர்ப்பம்- போக்சோ பிரிவில் வழக்கு

காட்வின் மைக்கேல் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.தலைமறைவாக உள்ள டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி: 4 மாத கர்ப்பம்- போக்சோ பிரிவில் வழக்கு
Published on

கோவை:

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு பாலாஜி கார்டனை சேர்ந்த டிரைவர் காட்வின் மைக்கேல் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். ஆனால் காட்வின் மைக்கேல் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

கடந்த 1-ந் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்ற அவர் மாணவியை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து சென்றார். காட்வின் மைக்கேலும், மாணவியும் சேர்ந்து சென்றபோது மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டார். அவர் 2 பேரையும் கண்டித்து போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி விடுவதாக கூறி எச்சரித்தார்.

இதனால் பயந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து காட்வின் மைக்கேல் அங்கு இருந்து தப்பிச் சென்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவர் காட்வின் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com