பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்வு

இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.
பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்வு
Published on

மத்திய கிழக்கு போர் சூழல், ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடு போன்ற காரணங்களால் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.

மத்திய கிழக்கு போர் தொடங்குவதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் கச்சா எண்ணெய் பீப்பாய் 69 அமெரிக்க டாலர்களாக இருந்தது. தற்போது ஒரு பீப்பாய் 114 அமெரிக்க டாலர்களாக உயர்ந்து உள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. தினமும் சுமார் ரூ.1600 கோடி நஷ்டம் ஏற்படுவதாக தகவல் வெளியானது.

ஆனாலும் கடந்த 2½ மாதங்களுக்கு மேலாக எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் இருந்தன. இதனால் ஒரு கட்டத்தில் நஷ்டம் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது.

இதற்கிடையே எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தில் ஒரு பகுதியை ஈடுகட்ட கடந்த 15-ந்தேதி நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் மாற்றமின்றி இருந்த நிலையில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.

மேலும் சிறிய அளவில்தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் இன்று மீண்டும் நாடு முழுவதும் பெட்ரோல் - டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இந்த அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது.

அதன்படி பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு தலா 90 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து ரூ.98.64-க்கு விற்பனை ஆகிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து ரூ.91.58-ஆக உள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் உயர்ந்து ரூ.104.49-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகள் உயர்ந்து ரூ.96.11-ஆகவும் உள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 96 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.109.70-க்கும், டீசல் விலை 94 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.96.07-க்கும் விற்பனை ஆகிறது.

மும்பையில் பெட்ரோல் விலை 91 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.107. 59-ஆகவும், டீசல் விலை 94 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.94.08-ஆகவும் உள்ளது. கடந்த 5 நாட்களில் 2-வது முறையாக பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கடந்த 5 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.65-ம், டீசல் லிட்டருக்கு ரூ.3.72-ம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 15-ந்தேதி பெட்ரோல்-டீசல் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டிருந்தாலும் எண்ணெய் நிறுவனங்களின் மொத்த இழப்பையும் முழுமையாக ஈடுசெய்யும் அளவிற்கு இல்லை.

இந்த நிலையில்தான் இன்று மீண்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் உள்ளிட்டவைகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com