TN Assembly Election| போதிய பஸ்கள் இயக்கப்படாததால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தவித்த பயணிகள்

இதுவரை கடந்த 21-ந்தேதி முதல் இன்று வரை மொத்தம் 10,169 பஸ்கள் இயக்கப்பட்டு, 6 லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
TN Assembly Election| போதிய பஸ்கள் இயக்கப்படாததால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தவித்த பயணிகள்
Published on

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊரில் வாக்களிக்க கடந்த 2 நாட்களாக புறப்பட்டு சென்றனர். பண்டிகை காலம் போல் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றால் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வழக்கமான பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நேற்று முன்தினம் சுமார் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்களில் சென்று இருந்தனர். நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

இதனால் பஸ்நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டமாக காணப்பட்டது. ஆம்னி பஸ்களில் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் மற்றும் ரெயில்களில் முன்பதிவு இருக்கை இல்லாததால் பெரும்பாலானோர் அரசு பஸ்களில் செல்ல குவிந்தனர். இதனால் கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திக்குமுக்காடியது.

திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செஞ்சி, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவித்தனர். பஸ்நிலையத்திற்கு வரும் பஸ்களில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். இதனால் பஸ்களிலும் கடும் கூட்டம் நிரம்பி வழிந்தது. போதிய பஸ்கள் இல்லாததால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர். இதனால் அவர்கள் விடிய, விடிய காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ஏராளமானோர் பஸ்நிலையத்தில் இருந்த போக்குவரத்து அதிகாரிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பஸ் நிலையத்தில் ஏராளமானோர் அமர்ந்து போராட்டம் செய்தனர். மேலும் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் த.வெ.க. என்று கூச்சலிட்டனர்.

மேலும் ஜி.எஸ்.டி. சாலையில் மறியிலில் ஈடுபட முயன்றனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடு பட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத் தொடர்ந்த கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் இன்று அதிகாலை வரை ஏராளமானோர் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் காத்திருந்து தவித்த படி சென்றனர். காலை 4 மணி வரை பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டினர். இன்று காலையும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதனால் வண்டலூர் ஜி.எஸ்.டி.சாலையில் அதிகாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆர். மோகன் கூறும் போது, "சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. 22-ந்தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக இயக்கப்படும் 2,580 பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 4,158 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 6,738 பஸ்கள் இயக்கப்பட்டு, 4,38,000 பயணிகள் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

இதுவரை கடந்த 21-ந்தேதி முதல் இன்று வரை மொத்தம் 10,169 பஸ்கள் இயக்கப்பட்டு, 6 லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் பயணம் மேற்கொண்டு உள்ளனர். மேலும் இந்த சிறப்பு பஸ்கள் இன்று மதியம் ஒரு மணி வரை தொடர்ந்து இயக்கப்படும். சென்னையில் இருந்து 69 ஆயிரத்து 383 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com