

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக பயணிகள் குவிந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டது.
வார விடுமுறை நாளான நேற்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் தனது சொந்த ஊருக்கு செல்ல குவிந்தனர்.
இந்நிலையில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதி இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் விடிய விடிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.
மேலும் வெளியூர்களுக்கு திட்டமிட்டப்படி செல்ல முடியாததால் பயணிகள் விடிய விடிய தவித்தனர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் இன்று காலை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பேருந்துகள் பேருந்து நிலையம் முன்பாக நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த மாட்டுத்தாவணி போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பேருந்து நிலையத்திற்குள் சென்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு போதுமான பேருந்து வசதி இல்லாததால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்.
எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பண்டிகை காலம் மற்றும் வார விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும், என கூறினர்.