

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், "காமராஜர் இறந்தபோது அவரது உடலை அடக்கம் செய்ய கருணாநிதியிடம் மெரினாவில் இடம் கேட்டனர். முதல்வராக இருந்து இறந்தால்தான் மெரினாவில் இடம் கிடைக்கும். அதனால் கிண்டியில் இடம் கொடுக்கிறோம் என்றனர்.
கருணாநிதி மட்டும் யார்? அவர் இறந்தபோது முன்னாள் முதல்வர் தானே? கருணாநிதி என்ன முடிவை எடுத்தாரோ? அதே முடிவைத்தான் நானும் எடுத்தேன். காமராஜருக்கு ஒரு நியாயம்? கருணாநிதிக்கு ஒரு நியாயமா?’’ என்றார்.
இந்நிலையில் இன்று விருதுநகரில் நடந்த பிரசாரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் "சங்கி கூட்டணியில் சேர்ந்ததால் அவர்களை போலவே வாட்ஸ் அப் வதந்திகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
காமராஜர் மறைந்தபோது, சொந்த மகனை போல் உடனிருந்து இறுதி நிகழ்வுகளை செய்தவர் கருணாநிதி. இது வரலாறு!
பழனிசாமி சொன்ன பொய் உண்மை என்றால், அந்த காலத்திலேயே இது சர்ச்சையாகி இருக்கும். பத்திரிகைகளில் செய்தியாகி இருக்கும்.
ஆனால், அப்படி எதுவுமே இல்லை. தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய புத்தகங்களிலேயே கருணாநிதியை புகழ்ந்துதான் எழுதியிருக்கிறார்கள்.
முந்தாநாள் அடித்த காற்றில் முதல்வராகி, மக்களால் தூக்கியெறியப்பட்ட பழனிசாமிக்கு இதெல்லாம் தெரியுமா? தப்பு செய்தால் வருத்தம் தெரிவிப்பதுதான் நல்ல மனிதருக்கான இலக்கணம்.
அதைவிட்டுவிட்டு, மேலும் மேலும் பொய்களை சொன்னால், பழனிசாமி இன்னும் அசிங்கப்பட்டுத்தான் போவார்" என்றார்.