

உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறக்கூடிய வனவிலங்குகள் நேராக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள வளர்ப்பு நாய்கள், ஆடு, மாடு உள்ளிட்டவற்றை வேட்டையாடும்.
அப்படி ஊருக்குள் வந்து வீடுகளில் வளர்க்க கூடிய பிராணிகளை வேட்டையாட கூடிய வனவிலங்குகள் ஆட்கள் சத்தம் கேட்டாலே போதும், அவர்களது கண்ணில் கூட படாமல் தான் வந்த வேலையை கச்சிதமாக முடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விடும்.
அப்படி தான் வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று குடியிருப்புக்குள் புகுந்து சுற்றியபோது, தனது கண்ணில் வளர்ப்பு நாய் ஒன்று படவே அதனை வேட்டையாட நினைத்து வீட்டிற்குள் சென்றதும், வீட்டின் உரிமையாளர் சாதுர்யமாக செயல்பட்டு அதனை வீட்டிற்குள் பூட்டி சிறைவைத்த ருசிகர சம்பவம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரங்கேறியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முதுமலை வனப்பகுதியையொட்டி மாயார் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள செல்வப்பா காலனி குடியிருப்பை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தனது வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார். சிவக்குமார் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். இந்த நிலையில் இரவு 10 மணியளவில் வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று மாயார் கிராமத்திற்குள் புகுந்தது.
அந்த கிராமத்திற்குள் சுற்றிய சிறுத்தை நேராக செல்வப்பா காலனி குடியிருப்புக்குள் புகுந்து சுற்றி திரிந்தது. அப்போது அந்த சிறுத்தையின் கண்ணில் சிவக்குமார் வீட்டில் வளர்த்து வரக்கூடிய வளர்ப்பு நாய் பட்டது. நாயை பார்த்த சிறுத்தைக்கு தனக்கு சாப்பிட இரை கிடைத்து விட்டதால் சந்தோஷமாக இருந்தது.
அந்த சந்தோஷத்துடனேயே சிறுத்தை நாயை வேட்டையாடும் நோக்கில் வேகமாக வீட்டை நோக்கி சென்றது. வீட்டின் வாசல் அருகே சென்ற சிறுத்தை நாயை கவ்வி பிடிக்க நினைத்து வீட்டிற்குள் நுழைந்து விட்டது. இந்த நிலையில் வீட்டிற்குள் ஏதோ ஒன்று நுழைந்து விட்டதை அறிந்து திடுக்கிட்டு சிவக்குமார் எழுந்தார். அப்போது வீட்டிற்குள் நாயின் அருகே சிறுத்தை நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தார்.
உடனடியாக, சிவக்குமார் துணிச்சலுடன் செயல்பட தொடங்கினார். தனது குடும்பத்தினர் மற்றும் வளர்ப்பு நாயின் பாதுகாப்பை உறுதி செய்ய நினைத்த அவர் சிறுத்தையை வீட்டிற்குள் பூட்டி வைக்க முடிவு செய்து சாதுர்யமாக செயல்பட்டார். உடனே சிவக்குமார் சத்தமின்றி வீட்டின் பின்பக்க கதவை திறந்து வெளியில் வந்தார். பின்னர் சிறுத்தை புகுந்த அறையின் வெளிக்கதவை பூட்டி வீட்டிற்குள் சிறுத்தையை சிறை வைத்தார்.
பின்னர் அவர் வனத்துறையினரை தொடர்பு கொண்டு வீட்டிற்குள் சிறுத்தை புகுந்த தகவலை தெரிவித்தார். இதற்கிடையே வீட்டிற்குள் சிறுத்தை சிறை வைக்கப்பட்ட தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிவக்குமாரின் வீட்டின் முன்பு திரண்டு விட்டனர்.
வீட்டின் அறைக்குள் சிக்கிய சிறுத்தை வெளியில் வர முடியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தது. வீட்டின் முன்பு திரண்ட மக்கள் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் சிக்கியிருந்த சிறுத்தையை பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்த சிறுத்தை மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது. வெளியில் வர முடியாததால் சிறுத்தை அங்குமிங்கும் ஓடியபடியே இருந்தது. சிறிது நேரம் ஜன்னல் அருகே நின்று கொண்டு மக்களை பார்த்து உறுமி கொண்டே இருந்தது.
பின்னர் சிறுத்தை அந்த அறையில் இருந்த கட்டிலுக்கு கீழே சென்று அமர்ந்து கொண்டது. சிறிது நேரத்துக்கு பின்னர் வெளியில் வந்து மக்களை பார்த்து உறுமி விட்டு, மீண்டும் கட்டிலில் ஏறிய சிறுத்தை அதில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தது. சிறுத்தையுடன் வளர்ப்பு நாயும் வீட்டிற்குள்ளேயே சிக்கி கொண்டது. ஆனால் உள்ளே சிக்கி கொண்டதால் வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்றும் செய்யவில்லை.
சிறுத்தையை பார்த்ததில் இருந்து நாய் குரைத்து கொண்டே இருந்தது. இதற்கிடையே மசினகுடி வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்து விட்டனர். அவர்கள் வீட்டிற்குள் சிக்கிய சிறுத்தையை பார்வையிட்டனர்.
அப்போது பொதுமக்கள் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உடனே வனத்துறையினர், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதா அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதா என்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இறுதியில் வீட்டிற்குள் சிக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பது என வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் சிறுத்தை ஆக்ரோஷமாகவே இருந்ததால் அதனை பிடிப்பது என்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது. இதனால் சிறுத்தை அமைதியாகும் வரை அதன் நடவடிக்கையை வனத்துறையினர் கண்காணித்தபடியே இருந்தனர்.
நள்ளிரவுக்கு பிறகு சிறுத்தை அமைதியாக கட்டிலில் ஏறி அமர்ந்து கொண்டது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் இறங்கினர். அங்கு கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தி விட்டு இன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் முன்பு கூண்டு வைத்தனர்.
பின்னர் நைசாக வீட்டின் கதவை திறந்து விட்டனர். வீட்டில் சிக்கிய சிறுத்தை வீட்டை விட்டு வெளியில் நடந்து வந்தது. அப்போது அங்கு ஏற்கனவே தயாராக இருந்த வனத்துறையினர் சிறுத்தையை, தாங்கள் வைத்த கூண்டில் பிடித்தனர்.
பின்னர் பிடிபட்ட சிறுத்தையை கால்நடை டாக்டர்கள் கண்காணித்தனர். அதனை தொடர்ந்து பிடிபட்ட சிறுத்தை லாரியில் ஏற்றப்பட்டு, அங்கிருந்து சீகூர் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திறந்து விடப்பட்டது. கூண்டை திறந்ததும் சிறுத்தை வேகமாக துள்ளி குதித்து வனத்தை நோக்கி ஓடியது.
இரவு 10 மணியளவில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தையானது 4 அரை மணி நேரமாக வீட்டிற்குள் பூட்டி வைக்கப்பட்டு இருந்ததால் அப்பகுதியே பெரும் பரபரப்பாகவே காணப்பட்டது. மக்களும் ஒருவித அச்சத்துடனேயே இருந்தனர். வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனத்தில் விட்ட பிறகே அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
வளர்ப்பு நாயை வேட்டையாட வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குள் பூட்டி சிறை வைத்த சம்பவம் நீலகிரியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.