ஓமனில் இறந்த தமிழக மாலுமியின் உடல் 14 நாட்களுக்குப் பின் தாயகம் வருகை : 10 மாத குழந்தையுடன் கதறிய மனைவி!

மாலுமி நிஷாந்தின் உடலுக்கு சொந்த ஊரில் மக்கள் கண்ணீர் அஞ்சலி!
SailorNishanth
Published on

ஓமன் நாட்டு கடற்பகுதியில் வர்த்தக கப்பலில் பணியாற்றியபோது, திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாலுமி நிஷாந்த் உயிர்த்தநாதனின் (35) உடல், 14 நாட்களுக்குப் பிறகு இன்று அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது.

என்ன நடந்தது?

தூத்துக்குடியைச் சேர்ந்த நிஷாந்த், 'எம்.டி செலஸ்டியல்' என்ற சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தக கப்பலில் இரண்டாம் நிலை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஜூன் 8 ஆம் தேதி ஓமன் நாட்டு கடற்பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்த போது அவருக்கு கடுமையான வாந்தியுடன் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அப்போது சரியான மருத்துவ வசதி மற்றும் மீட்பு உதவி கிடைக்காததால் ஜூன் 11 அன்று கப்பலிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உடல் அழுகியதாக எழுந்த சர்ச்சை..

நிஷாந்த் உயிரிழந்த பிறகு, அவரது உடலைப் பாதுகாக்கத் தேவையான குளிரூட்டும் வசதிகள் அந்தக் கப்பலில் இல்லை.

இதனால் உடல் அழுகத் தொடங்கிய நிலையில், சக ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்களை வைத்து உடலைப் பாதுகாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, நிஷாந்தின் உடலை மீட்கக் கோரி அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தமிழ்நாடு அரசும், பிரதமரின் அலுவலகமும் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டன.

அதன் விளைவாக, ஜூன் 14 அன்று ஓமனின் டுக்ம் துறைமுகத்தில் உடல் இறக்கப்பட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

14 நாட்களுக்குப் பின் சொந்த ஊர் வந்த உடல்..

அனைத்து சட்டப்பூர்வ மற்றும் தூதரக நடைமுறைகளும் முடிந்த நிலையில், நிஷாந்தின் உடல் இன்று ஓமனில் இருந்து விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்து பிரத்யேக அமரர் ஊர்தி மூலம் இன்று மதியம் தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

14 நாட்களாகக் காத்திருந்த அவரது மனைவி சராபின், 10 மாதக் குழந்தை, உறவினர்கள் மற்றும் மாலுமிகள் சங்கத்தினர் நிஷாந்தின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

தமிழக அரசு செய்த உதவி..

முன்னதாக, நிஷாந்தின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், பாதிக்கப்பட்ட குடும்ப நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com