அக்காள் கணவருடன் கள்ள தொடர்பு- பெற்ற குழந்தையை வீசி கொன்ற நர்சு கைது

பிரசவத்திற்குப் பின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பெண்ணை போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அக்காள் கணவருடன் கள்ள தொடர்பு- பெற்ற குழந்தையை வீசி கொன்ற நர்சு கைது
Published on

நாகர்கோவில் தேரைக்கால்புதூர், எஸ்.பி.காலனி பகுதியில் ஒரு வீட்டின் அருகே பச்சிளம் குழந்தை பிணம் கிடப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தை உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், அந்த குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆனது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்தப் பகுதியில் வசிப்பவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வரும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தான் பச்சிளம் குழந்தையை வீதியில் வீசியவர் என தெரிய வந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதன்விவரம் வருமாறு:-

பிறந்த குழந்தையை வீசிய பெண்ணின் சகோதரிக்கு திருமணமாகியும் குழந்தை இல்லை. இந்த நிலையில் அவரது கணவர் மதன்குமார் (வயது 43) அடிக்கடி மாமனார் வீட்டிற்கு வந்த போது மனைவியின் தங்கையான நர்சுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாக மாறியது. இந்த உறவினால் நர்சு கர்ப்பமடைந்துள்ளார். இதனை தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் ரகசியமாக மறைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டபோது வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நர்சு, பிறந்த குழந்தையை வீட்டின் அருகே வீசியுள்ளார். இதில் அக்குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்த சூழலில் பிரசவத்திற்குப் பின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பெண்ணை போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் அவரது உடல்நிலையை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். மேலும், பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணமான மதன்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

பச்சிளம் குழந்தையை கொன்று வீசிய சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com