

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா மையங்களுக்கும் பொதுமக்கள் குடும்பமாக செல்கிறார்கள். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கோடை வெயில் வறுத்தெடுத்தாலும் கூட அதையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா மையங்களை நாடி செல்கிறார்கள். கொடைக்கானல், ஊட்டி, ஏலகிரி, ஏற்காடு போன்ற மலைப்பிரதேசங்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் காரணமாக சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் எல்லா வகுப்புகளும் நிரம்பியதால் மக்கள் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள்.
முற்றிலும் ஏ.சி. வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், கோவை, பெங்களூரு நகரங்களுக்கு செல்லக்கூடிய வந்தே பாரத் ரெயில்களில் வருகிற 17-ந்தேதி வரை இடமில்லை.
சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய வந்தே பாரத் ரெயிலில் 11-ந் தேதி வரை காத்திருப்போர் பட்டியல் உள்ளது. இதே போல சதாப்தி எக்ஸ்பிரஸ், டபுள் டக்கர், பிருந்தாவன், லால் பாக், காவேரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் இடமில்லை.
கோவை வந்தே பாரத் ரெயிலில் 29-ந்தேதி வரை காத்திருப்போர் பட்டியல் உள்ளது. கோவை சதாப்தி எக்ஸ்பிரசில் 8-ந்தேதி வரை இடமில்லை.
நெல்லை வந்தே பாரத் ரெயிலில் 16-ந்தேதி வரை அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. இதேபோல நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரெயிலில் 17 -ந்தேதி வரை இடம் இல்லை. வந்தே பாரத் ரெயில்களில் கட்டணம் அதிகம் இருந்தாலும் கூட அதனை பொருட்படுத்தாமல் மக்கள் சொகுசாக பயணம் செய்ய விரும்புகிறார்கள்.
இது பற்றி ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, மே மாதம் இறுதி வரையில் இதே நிலைதான் நீடிக்கும். ஜூன் மாதம் முதல் வாரம் வரை ரெயில்களில் இடம் கிடைப்பது கடினம். காத்திருப்போர் பட்டியல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.