‘நிர்மலா சீதாராமனின் குட்டு அம்பலமாகிவிட்டது’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெரும்பாலான மாநில அரசுகள், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக நிர்மலா சீதாராமன் கூறியது உண்மைக்கு புறம்பானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.
‘நிர்மலா சீதாராமனின் குட்டு அம்பலமாகிவிட்டது’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

நாட்டில் நெல் உற்பத்தி அதிகமாக இருப்பதால், மாநில அரசு தரப்பில் அதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் அனுப்பியதாக தஞ்சாவூர் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இது பெரும் விவாதத்தை கிளப்ப மத்திய அரசு அனுப்பிய கடிதம் ஒரு 'ஆலோசனை' மட்டுமே, கட்டாய உத்தரவல்ல என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். ஒரே வகையான பயிர் சாகுபடியைத் தவிர்த்து பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிக்கவே இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சர் உண்மையை திரித்துப் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின்,

‘கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?’ என சவால் விடுத்திருந்தார்.

தொடர்ந்து இதற்கு பதில் அளிக்கும் விதமாக பதிவு ஒன்றை எழுதி அதில் அந்தக் கடிதத்தை சேர்த்து தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,

“ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே,

தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள்.

அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது.

மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது.

கடந்த பிப்ரவரி மாதம், கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் இதுகுறித்து வெளியிட்ட பதிவே இதற்குச் சாட்சி” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் போட்ட பதிவையும் மறுபகிர்வு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com