

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அரசு பஸ் போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது.
இந்த பணிமனையில் இருந்து கோத்தகிரி, ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிமனையில் வேலை பார்த்து வந்த குன்னூர் எடப்பள்ளியை சேர்ந்த கண்ணன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம்-2 கிளைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் நேற்றுமுன்தினம் மேட்டுப்பாளையம்-2 கிளையில் பணியில் சேர்ந்தார். அவருக்கு அன்று மதுரை செல்லும் பஸ்சில் பணி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ்சை இயக்கி சென்றார்.
அன்றைய தினம் நள்ளிரவில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் அடுத்த எல்லப்பாளையத்தில் ஓட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடிப்பதற்காக பஸ் நிறுத்தப்பட்டது. டிரைவர் கண்ணன் பஸ்சின் அருகே நின்றிருந்தார்.
அப்போது பின்னால் அருப்புக்கோட்டையை நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சுக்கு பின்னால் தனியார் ஆம்னி பஸ் வந்தது. ஆம்னி பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற அரசு பஸ் மீது மோதியது.
அந்த பஸ் சாலையோரம் டீ குடிப்பதற்காக நின்ற அரசு பஸ் மீதும், பஸ்சின் அருகே நின்ற டிரைவர் கண்ணன் மீதும் மோதியது. இதில் டிரைவர் கண்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் அரசு பஸ் டிரைவர் கண்ணனின் இறப்புக்கு கோத்தகிரி போக்குவரத்து பணிமனை நிர்வாகம் தான் காரணம் என்றும், பொது மேலாளர், கிளை மேலாளரை கண்டித்தும் இன்று காலை அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கோத்தகிரி போக்குவரத்து பணிமனை முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள், டிரைவர் கண்ணனின் இறப்புக்கு நீதி கேட்டு பஸ்களை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, கோத்தகிரி பணிமனையில் பணிபுரிந்த ஓட்டுநர் மீது ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு, அவரை பணியிட மாற்றம் செய்து விட்டனர். அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நாளிலேயே தாராபுரம் பகுதியில் நடந்த விபத்தில் இறந்து விட்டார்.
உயிரிழந்த டிரைவர் கண்ணனுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அவரது இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பஸ் டிரைவர்களின் இந்த போராட்டம் காரணமாக, கோத்தகிரி பணிமனையில் இருந்து ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், திருப்பூர், கூடலூர் மற்றும் கோத்தகிரியை சுற்றியுள்ளி கிராம பகுதிகளுக்கு இயங்கக்கூடிய 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை.
வாரவிடுமுறை முடிந்து இன்று திங்கட்கிழமை என்பதால் கோவை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பஸ் நிலையங்களில் அதிகாலையிலேயே ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர். ஆனால் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பஸ்கள் இயக்கப்படாதால் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.