

தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் த.வெ.க. தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநிலத்தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக தலைவர் வைகோ, ஐயூஎம்எல் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர்.,
“தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நேர்மறையாக இருந்தது. இக்கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்று தோழமை கட்சிகளை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துசெல்வது.
இதனை மூன்று நிலைகளாக பார்க்கிறோம். ஆதரவு கொடுக்கின்றன கட்சிகள், ஆதரவில் பங்குபெற்ற கட்சிகள், அடுத்த நிலை கூட்டணி அமைப்பதற்கான நிலை. இந்த மூன்று நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
ஒருங்கிணைப்புக் குழு, பொது நிகழ்ச்சி நிரல், கூட்டணியின் பெயர் குறித்து அடுத்த கூட்டத்தில் விவரிக்கப்படும். தவெகவில் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்களோ, அன்று இந்தியா கூட்டணி குறித்து பேசப்படும்.” என தெரிவித்தார்.