நெல்லை இரட்டைக்கொலை - 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை

இரட்டைக்கொலை குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
investigation
Published on

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தை சேர்ந்தவர் சித்திரபுத்திரன்(வயது 70). இவருடைய மகன் காளிமுத்து (40). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மகன்கள் சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் ரெட்டியார்புரத்தில் இருந்து மூலச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

இரட்டைக்கொலை

அப்போது அவர்களை கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த கும்பல் மாதுடையார்குளம் அருகில் சென்றபோது, காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதி அவரை தலையை துண்டித்து கொலை செய்தது. மேலும் இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இந்த இரட்டைக்கொலை குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2006-ம் ஆண்டு தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஒரே சமூகத்தை சேர்ந்த உறவினர்களான இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் தீராத பகையை ஏற்படுத்தி இதுவரை 7 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதும், தற்போது எதிர் தரப்பினர் பழிக்குப்பழியாக காரை மோதவிட்டு தந்தை-மகனை கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.

9 தனிப்படை அமைப்பு

இதுதொடர்பாக மூலச்சி பகுதியை சேர்ந்த சிவகுருநாதன் மகன்கள் மகேஷ், மணிகண்டன், கிருஷ்ணன், பெருமாள் பாண்டியன் மகன்கள் அருள், மணி, பட்டுராஜா, ராசையா மகன்கள் சுபாஷ், மகேந்திரன், வெள்ளப்பாண்டி மகன் தங்கதுரை, கிருஷ்ணன் மகன் கந்தன், மூக்காண்டி மகன் ராஜதுரை ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தலைமறைவான அவர்கள் அனைவரையும் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ் உத்தரவின்பேரில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு

இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்தால்தான், தந்தை-மகன் உடல்களை பெற்று கொள்வோம் என்று குடும்பத்தினர், உறவினர்கள் தெரிவித்தனர். இன்று 2-வது நாளாக 2 பேரின் உடல்களையும் பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து மூலச்சி கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே சந்தேகத்தின்பேரில் 5 பேரை பிடித்து ரகசிய இடங்களில் வைத்து தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

டி.ஐ.ஜி. பேட்டி

இதுதொடர்பாக நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு கூறுகையில், 5 பேர் வரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களுக்கு இந்த கொலை சம்பவத்தில் எந்த அளவுக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

பிடிபட்டவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை எடுத்தால் மட்டுமே அவர்கள் கொலையாளிகள் என்று சொல்ல முடியும். சரியான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com