அதிமுகவுக்கு ஏற்பட்ட நிலை நாளை திமுகவுக்கும் ஏற்படும் - நாஞ்சில் சம்பத்

தமிழக வெற்றிக் கழகம் என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல; அது தமிழகத்தின் விடியலுக்கான மாற்றுச் சக்தி.
அதிமுகவுக்கு ஏற்பட்ட நிலை நாளை திமுகவுக்கும் ஏற்படும் - நாஞ்சில் சம்பத்
Published on

உடுமலை, அமராவதி நகர் அருகே ஆக்ஸ்போர்டு சைனிக் பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வெற்றி விழா, புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த கிறித்தவ அமைப்பின் நிர்வாகி செந்தில்குமார் தலைமையில் சுமார் 500 பேர் தவெகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

"தமிழக வெற்றிக் கழகம் என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல; அது தமிழகத்தின் விடியலுக்கான மாற்றுச் சக்தி. கட்சித் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே, வியக்கத்தக்க வகையில் மக்கள் ஆதரவைப் பெற்று இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத பேரியக்கமாக உருவெடுத்துள்ளது. கட்சியின் கொள்கைகளையும், அதன் அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பையும் பாராட்டி, தமிழக அரசியலில் தவெக ஏற்படுத்தி வரும் மாற்றங்களை மக்கள் அறிவார்கள்.

தற்போதைய அரசியல் சூழலில் ஒரு நேர்மையான, வெளிப்படையான மாற்றத்தை தமிழக முதல்வர் விஜய். அதன் காரணமாகவே இளைஞர்களும் பெண்களும் தவெக-வை நோக்கி அணிவகுத்து வருகின்றனர். திரையுலகில் உச்சத்தில் இருந்தபோதே மக்கள் நலனுக்காகவும், தமிழகத்திற்கு ஒரு நல்ல அரசியல் மாற்றத்தைத் தருவதற்காகவும் தனது புகழையும், உழைப்பையும் அர்ப்பணித்து களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய் அவர்களின் துணிச்சலையும், அர்ப்பணிப்பும், எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற மக்கள் தலைவர்கள் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைப் போல, தவெக தலைவர் விஜய் தலைமையில் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

படிப்படியாக கட்சியின் உள்கட்டமைப்பு வலுப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசியலில் விஜயின் வருகையால் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் ஏதேச்சதிகார போக்கின் காரணமாக இரண்டாக உடைந்துள்ளது. எதிர்காலத்தில் திமுகவுக்கும் இதே நிலை ஏற்படலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் தவெக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com