பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் - நயினார் நாகேந்திரன்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவது தான் ஸ்டாலினின் குறிக்கோள்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் - நயினார் நாகேந்திரன்
Published on

ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் இன்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:-

கோவையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

நாகர்கோவிலில் நடத்திய ரோடு ஷோ மூலம் மக்கள் எழுச்சியை ஒவ்வொருவரின் முகத்திலும் பார்க்க முடிந்தது. இதைத்தொடர்ந்து வரும் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சிவகிரியில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்கிறார். மேலும் சிவகிரியில் ரோடு ஷோ செல்ல இருக்கிறார்

நாட்டில் நடைபெறக்கூடிய கஞ்சா, போதைப்பொருள் பழக்கங்கள் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என பெரும்பான்மையான பெண்கள் விரும்புகிறார்கள். பணம் வேண்டாம் டாஸ்மாக், போதைப்பொருட்களை நிறுத்தினால் போதும் என்ற மனநிலை பெண்களிடம் உள்ளது.

இதன் காரணமாக தான் பாராளுமன்றத்தில் பெண்கள் 33 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து மறுவரையறை திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதே நேரத்தில் ஆண்களுக்கான இட ஒதுக்கீடு குறைத்து விடாது. ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவீதம் கொடுப்பது மூலம் நாடாளுமன்றத்தில் 850 இடங்கள் கொண்டு வரப்படும்.

இதற்கு முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு போராட்டம் செய்கிறார். கடந்த 5 ஆண்டுகளும் மக்களுக்கான திட்டங்களை முதலமைச்சர் செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு எதிர்ப்பு, டெல்லிக்கு தமிழ்நாட்டுக்கு போட்டி என்று இதையே தான் சொல்லி வருகிறார்.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு காலம் ஆகிவிட்டது. அப்போது 40 கோடி மக்கள்தொகை இருந்தது. இன்று 140 கோடி மக்கள்தொகையாக மாறிவிட்டது. இதன் அடிப்படையில் மாற்றம் வேண்டும். எண்ணிக்கையில் வளரக்கூடிய மாநிலத்திற்கும், பெண்களுக்கும் இடம் ஒதுக்கீடு கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதன் அடிப்படையில் மாநில எண்ணிக்கை கூட்டப்படுகிறது.

எல்லா மாநிலங்களும் சீராக கூட்டப்படுகிறது. ஆனால் டெல்லிக்கு எதிராக போராடுவோம். பழைய ரூபத்தை காட்டுவோம் என திமுக கூறுகிறது. அப்படி கூறினால் திமுக பழையபடி ரவுடிசம் செய்யப் போகிறார்களா?

ஏற்கனவே டாஸ்மார்க் கஞ்சாவால் மக்கள் அவதிப்படுகின்றனர். டாஸ்மாக், கஞ்சா செய்வதெல்லாமே திமுக சார்ந்தவர்கள்தான் மக்களை ஏமாற்றும் வகையில் இதை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் நடந்தாலும் இந்தியா அமைதியாக உள்ளது. வளைகுடா பகுதிகளில் இந்திய கப்பல்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் வலிமையான பாரத பிரதமர் பெற்று இருக்கிறோம்

இதனால் மத்திய அரசோடு மோதல் போக்கு இல்லாமல் மக்களுக்கான திட்டங்களை பெற்று மக்களுக்கு கொடுப்பதுதான் மக்களாட்சியாக இருக்கக்கூடிய முதல்வரின் கடமை. அந்த கடமையிலிருந்து முதலமைச்சர் தவறி விட்டார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவது தான் ஸ்டாலினின் குறிக்கோள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி பயத்தின் காரணமாக பேசி வருகிறார். இதுபோன்று எமர்ஜென்சி காலத்தில் திமுக பேசியது. இதன் பின்னர் திமுககாரர்களை அனைவரையும் சிறையில் அடைத்தனர். அந்த மாதிரி ஒரு சூழலுக்கு ஆளாகி விடுமோ என்று பயத்தில் திமுக இருக்கிறது. இப்போதைய ஆட்சியில் காவல்துறையினருக்கு மரியாதை இல்லை.

பெண்கள் இடஒதுக்கீடு 15ஆண்டுகளாக இருக்கும் பிரச்சனை 543 வைத்து கொண்டு நாடாளுமன்றத்தில் எப்படி செயல்படுவது?

தேவகவுடா பிரதமராக இருந்தபோதும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது.

ஒவ்வொரு மசோதா கொண்டு வரும்போது ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது.

மத்திய அரசு எந்த நிதியும் தமிழகத்திற்கு வழங்குவதில் குறைக்கவில்லை.

மெட்ரோ ரெயில் கோவைக்கு வரவில்லை என்று சொல்லும் மாநில அரசு டிபிஆர் போட தெரியவில்லை

விஜய் தேர்தல் அறிக்கை குறித்து கேட்ட கேள்விக்கு,

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி. இதில் யார் தேர்தல் அறிக்கை வெளியிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஆளுங்கட்சியாக வர முடியாதவர்கள் எது வேண்டுமானாலும் சொல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com