படப்பை அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை- கடன் தொல்லையால் விபரீத முடிவு

கடன் கொடுத்தவர்கள் யாரேனும் நெருக்கடி கொடுத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
படப்பை அருகே 2  குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை- கடன் தொல்லையால் விபரீத முடிவு
Published on

படப்பை அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகரில் வசித்து வந்தவர் ஷாம்சியா(வயது29). இவரது கணவர் ஆசிப் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு குடும்ப தராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களது மகள் ஆசிபா(10), மகன் அப்சர்(5). குழந்தைகள் இருவரும் சென்னை கொளத்தூரில் உள்ள ஷாம்சியாவின் அண்ணன் வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு, 1-ம் வகுப்பு படித்து வந்தனர். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் குழந்தைகள் இருவரும் தாய் ஷாம்சியாவுடன் தங்குவது வழக்கம்.

ஷாம்சியா மாடம்பாக்கத் தில் உள்ள இருசக்கர வாகனம் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தார். அவர் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். மேலும் கடன் தொல்லையும் இருந்து வந்தது. இதனால் ஷாம்சியா மிகவும் மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு குழந்தைகள் ஆசிபா மற்றும் அப்சர் ஆகிய இருவரும் தாய் வீட்டிற்கு வந்தனர். கடன் பிரச்சனையால் மிகவும் மனவேதனை அடைந்த ஷாம்சியா தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி இன்று காலை 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு ஷாம்சியா மாடம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றிற்கு வந்தார்.

திடீரென அவர் மகள் ஆசிபா, மகன் அப்சர் ஆகிய இருவரையும் கிணற்றிற்குள் தள்ளிவிட்டார். மேலும் ஷாம்சியாவும் கிணற்றுக்குள் குதித்தார். இதில் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

சிறிது நேரத்திற்கு பின்னர் அவ்வழியே வந்தவர்கள் பார்த்த போது ஷாம்சியாவும் அவரது 2 குழந்தைகளும் கிணற்றுக்குள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து படப்பை போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் பிணமாக மிதந்த ஷாம்சியா, அவரது மகள் ஆசிபா, மகன் அப்சர் ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஷாம்சியா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் கடன் தொல்லையால் தற்கொலை செய்வதாக அவர் எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவருக்கு கடன் கொடுத்தவர்கள் யாரேனும் நெருக்கடி கொடுத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஷாம்சியா பயன்படுத்திய செல்போனில் அவர் கடைசியாக யார் யாரிடம் பேசினார்? என்ற விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள். கடன் பிரச்சனையால் 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com