‘ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு தேர்தலில் மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது’ - நடிகர் சரத்குமார்

சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவையும் ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினரிடம் அபராத தொகையாக வசூல் செய்ய வேண்டும்.
‘ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு தேர்தலில் மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது’ - நடிகர் சரத்குமார்
Published on

உரிய காரணங்கள் இன்றி பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்று 2 வாரங்கள் மட்டுமே கடந்தநிலையில், மக்கள் அளித்த வாய்ப்பை அலட்சியமாக கருதி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பொது பணியை விடுத்து, தங்கள் சுயநலத்திற்காகவும், சுயதேவைக்காகவும் மக்களுக்கு சேவை செய்ய கொடுக்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்து தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது.

தேர்தலுக்கான செலவுகள் அனைத்தும் மக்களின் வரிப்பணம். தேர்தல் ஆணைய அதிகாரிகள் உட்பட எண்ணற்றவர்களின் நேரமும், உழைப்பும் மக்களாட்சியை நிலைநாட்டுவதற்காக செலவிடப்பட்டிருக்கிறது. மக்களின் வரிப்பணம், பொருளாதார விரயம் இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் தொகுதியில் மறுதேர்தல்வரும் சூழல் ஏற்பட்டு இவர்கள் மீண்டும் போட்டியிட நேரிட்டால்,

அந்த சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவையும் ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினரிடம் அபராத தொகையாக வசூல் செய்ய வேண்டும். மேலும் வாக்காளர்களும் அவர்களுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும்.

தமிழ்நாட்டில் நடந்தேறும் இந்த குறுகிய காலக்கட்ட அரசியல் நிகழ்வுகள் ஆரோக்கியமான அரசியல் அல்ல. எனவே, மக்கள் ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினரின் தொகுதியில் மறுதேர்தல் வரும்போது, இப்படிப்பட்டவர்களை மக்கள் முழுவதுமாக புறக்கணித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com