ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான தனி சட்டம் - அமைச்சர் வன்னியரசு உறுதி

இந்த அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவோம்.
அமைச்சர்  வன்னியரசு
Published on

தமிழ்நாட்டில் சிறார்களிடையே உள்ள சாதிய வேறுபாடுகளைக் களையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார். மேலும், ஆணவக் கொலைக்கு எதிராக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட எல்லைப் பகுதிகளில் அரங்கேறிய அரிவாள் வெட்டு போன்ற தொடர் வன்முறை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் வன்னியரசு வன்முறையை கட்டுப்படுத்துவது மற்றும் புது சட்டம் கொண்டுவருவது குறித்து பேசினார்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் வன்னியரசு, "எங்களுக்கு அமைச்சர் பதவியை விட அமைச்சரவையில் இடம் பெறுவதை விட சமூக நீதியும், சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும்தான் மிக முக்கியம். அதை நோக்கி தான் நகர்வோம். ஆட்சியில் பங்கு எடுத்துவிட்டோம் என்பதற்காக அதை விட்டுவிட முடியாது.

அதுதான் எங்களுக்கு பிரதானம். நாங்கள் அதிகாரத்திற்கு வந்துள்ளதை வைத்து மக்கள் நல திட்டங்களை கொண்டு வருவோம். மக்கள் எங்களை ஒரு ரோல் மாடலாக பார்ப்பார்கள். வரும் காலங்களில் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவோம்.

சட்டமன்றத்தில் நான் பேசிய முதல் உரையிலேயே இதற்கான கோரிக்கையை வைத்தேன். நான் பேசியதை தொடர்ந்து முதல்வரும் இது தொடர்பாக குறிப்பிட்டார். ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான தனி சட்டம் கொண்டு வருவது குறித்து ஆராய முன்னாள் நீதியரசர் தலைமையிலான குழுவின் அளித்த அறிக்கை பரிசீலனையில் உள்ளது. அதன் அடிப்படையில் வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஆணவப் படுகொலைகள் தடுப்புத் தனிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com