த.வெ.க. கட்அவுட்டுகள், பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் - நிர்வாகிகளுக்கு அமைச்சர் உத்தரவு

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் நம் கட்சித் தலைவர் விரும்புவதில்லை.
CM Vijay - Minister Anand
Published on

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் முதலமைச்சர் விஜய் உத்தரவுபடி கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேனர் கலாச்சாரம்

நமது கழகத் தலைவர் முதலமைச்சர் விஜய் பொதுமக்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்டவர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த செயலிலும் யாரும் ஈடுபடுவதை அவர் விரும்புவதில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரும் கட்அவுட் மற்றும் பேனர் வைக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்து வருகிறார்.

அவரது அறிவுறுத்தலின் பேரில் கட்சி நிர்வாகிகளுக்கு தொண்டர்களுக்கு பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் பலமுறை அறிக்கை வாயிலாக பேனர் கலாச்சாரம் நம்மிடையே இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறேன். முதலில் சரி என்று சொல்கிறீர்கள். அடுத்ததாக நிகழ்ச்சிக்கு வரும்போது கட்அவுட்களும் பேனர்களும் சாலை ஓரங்களில் இருந்து கொண்டிருக்கிறது. கேட்டால் தெரியாமல் வைத்து விட்டார்கள் என்று சொல்லி விடுகிறீர்கள். எனவே இது போன்ற கலாசாரத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் என்றும் எதிரானது.

கட் அவுட் மற்றும் பேனர் கலாச்சாரம் பற்றி பலமுறை அறிக்கை வாயிலாக கட்சித் தலைவர் முதலமைச்சர் விஜய் உத்தரவுப்படி பேனர்கள் வைக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டும் கூட பல இடங்களில் நமது முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்கள் ஆங்காங்கே இருந்து கொண்டிருக்கின்றன.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் நம் கட்சித் தலைவர் விரும்புவதில்லை. எனவே சென்னை மற்றும் தமிழகமெங்கும் வைக்கப்பட்டுள்ள பேனர்களையும் கட் அவுட்டுகளையும் உடனடியாக நிர்வாகிகளும் தொண்டர்களும் அகற்ற வேண்டும். இனி இதுபோன்ற கலாச்சாரங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஈடுபடக்கூடாது என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com