

தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான என்.ஆனந்த் தொகுதி மக்களிடம் இருந்து வரும் புகார்களை ஆய்வு செய்து உடனடியாக தீர்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தொகுதியில் அடிப்படை வசதிகள், சுகாதார வசதி, பாதுகாப்பு வசதி, குடிநீர் வசதி என தி.நகர் மக்களின் தேவைகளை உடனுக்குடன் சரி செய்து வருகிறார். தொகுதி பிரச்சனைகளை தெரிவிப்பதற்கு வாட்ஸ்அப் எண், இணையதள முகவரி, இ-மெயில் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கோடம்பாக்கம் 132-வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகள் மந்தமாக நடப்பதாக அமைச்சர் என். ஆனந்துக்கு புகார்கள் வந்தது.
பொதுமக்கள் புகாரை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு கட்டிட பணியாளர்களின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதை தொடர்ந்து பொதுமக்களின் மருத்துவ தேவையை கருதி இன்னும் 45 நாட்களுக்குள் அனைத்து கட்டிட பணிகளையும் நல்ல தரத்துடன் கட்டி முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன், உதவி பொறியாளர் நந்தினி, சென்னை தெற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தி.நகர் க.அப்புனு ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை தொடர்ந்து தி.நகர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தளபதி விலையில்லா விருந்தகத்தை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தி.நகர் தொகுதியில் ஏற்கனவே 2 தளபதி விலையில்லா உணவகம் இருக்கும் நிலையில் 3-வதாக பொதுமக்களின் நலன் கருதி தி.நகர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தளபதி விலையில்லா விருந்தகத்தை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்துள்ளார்.