

தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். செல்வப்பெருந்தகை கடந்த 2024-ம் ஆண்டு தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வென்றது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடர வேண்டும் என்று ஒரு பிரிவும், த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஒரு பிரிவும் செயல்பட்டது. இதனால் கட்சிக்குள் கோஷ்டி பூசல் அதிகரித்தது. த.வெ.க. கூட்டணி அமையாமல் தடுத்ததாக செல்வப் பெருந்தகையை பலரும் விமர்சித்தனர்.
ஆனால் தேசிய கட்சியில் தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அகில இந்திய செயலாளர்கள் என அனைவரிடமும் கருத்து கேட்டுத்தான் அகில இந்திய தலைமையும் முடிவெடுத்தது என்று விளக்கம் அளித்தார்.
இதற்கிடையில் புரிதல் இல்லாமல் பலரும் பேசுவதால் தன்னை தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கும்படி செல்வப் பெருந்தகை கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து அவருக்கு பதிலாக மாணிக்கம் தாகூரை தலைவராக கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி. நாளை (திங்கள்) மாலை 4.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பதவி ஏற்கிறார்.
புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள செல்வப் பெருந்தகை நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக கூறினார்.
மேலும் அமைச்சர்கள் ராஜேஷ்குமார், பி.விசுவநாதன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்கிறார்கள்.
புதிய தலைவராக நியமிக்கப்பட்டதும் மாணிக்கம் தாகூர் முன்னாள் மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி அனைவரது ஒத்துழைப்பையும் கோரினார்.
இன்று டெல்லியில் கட்சியின் அகில இந்திய தலைவர் கார்கே, அமைப்பு பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
உள்ளாட்சித் தேர்தலிலும் த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும். தேர்தல் அறிவிப்பு வரும்போது கூட்டணி இடங்கள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோருக்கிடையிலான வலுவான உறவு, தமிழக மக்கள் மத்தியில் இந்த கூட்டணிக்கும் தலைவர்களுக்கும் மிகப்பெரிய நம் பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் இது மிக முக்கியமான தருணமாகும். 59 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி முதன்முறையாக ஆட்சியில் பங்கு வகிக்கிறது.
த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கு வகிப்பதால், எங்கள் மீதான பொறுப்பு கூடியுள்ளது. தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நல்லாட்சியை வழங்குவதும், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்வதும் எங்களது முதன்மை இலக்குகள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்பது மிக முக்கியமான மற்றும் பொறுப்புமிக்க பணியாகும். பெரும் தலைவர்கள் அலங்கரித்த இந்த பொறுப்பை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்று கருதுகிறேன்.
தற்போது கிடைத்துள்ள அமைச்சரவை வாய்ப்பைப் பயன்படுத்தி, 2 அமைச்சர்களின் துணையுடன் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் மிக பலமான இயக்கமாக மாற்றுவதே எனது ஒரே இலட்சியம்.
காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடினோம். தற்போது அந்த மரியாதை கிடைத்திருக்கிறது. இந்த மரியாதையுடன் மக்களுக்கான பணியில் கட்சி மிக கவனமாகச் செயல்படும்.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.