லாட்ஜில் துடிக்க, துடிக்க கொலை: வேறு ஒருவருடன் தொடர்பு என சந்தேகத்தால் காதலியை வாலிபர் கொன்றது அம்பலம்

தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு ஒருவருடன் பழகிய நிலையில் மீண்டும் பாரதி பெருமாள் காதலியோடு சேர்ந்து வாழ்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
லாட்ஜில் துடிக்க, துடிக்க கொலை: வேறு ஒருவருடன் தொடர்பு என சந்தேகத்தால் காதலியை வாலிபர் கொன்றது அம்பலம்
Published on

சென்னை பெரியமேடு, குமரப்பா தெருவில் உள்ள லாட்ஜில் சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள் என்ற வாலிபர் தனது காதலியான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த பவ்யா என்ற இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நேற்று முன்தினம் காலையில் இருவரும் பெரியமேடு குமரப்பா தெருவில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கிய நிலையில்தான் நேற்று காலையில் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

பெரியமேடு போலீசார் இருவரது உடலையும் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரணையில் இந்த கொலை தொடர்பாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட பவ்யா சென்னையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில் தான் ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாளுடன் காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பழகி வந்துள்ளனர்.

இவர்களது காதலுக்கு சாதி தடையாக இருந்த நிலையில் அதையெல்லாம் கடந்து திருமணம் நடந்து உள்ளது. இந்த நிலையில் பவ்யா வேறொரு வாலிபருடன் தொடர்பில் இருப்பதாக பாரதி பெருமாள் சந்தேகப்பட்டுள்ளார். இதன் காரணமாக பாரதி பெருமாள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இருப்பினும் காதலியுடனான தொடர்பை துண்டிக்காமலேயே அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில்தான் மாணவியை அழைத்துக் கொண்டு பெரியமேடு லாட்ஜில் அறை எடுத்து வாலிபர் பாரதி பெருமாள் தங்கினார். அப்போது இருவருக்கும் இடையே சேர்ந்து வாழ்வது தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு ஒருவருடன் பழகிய நிலையில் மீண்டும் பாரதி பெருமாள் காதலியோடு சேர்ந்து வாழ்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் பவ்யாவுக்கோ அதில் விருப்பமில்லாமல் இருந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாகவே இருவருக்கும் இடையே லாட்ஜில் வைத்து மோதல் முற்றி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாகவே பாரதி பெருமாள் ஆத்திரமடைந்து பவ்யாவை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காதலி பவ்யாவை கொலை செய்துவிட்டு காதலன் பாரதி பெருமாள் தற்கொலை செய்து கொண்டு இருப்பதால் எதற்காக கொலை நடந்தது என்பது பற்றிய உறுதியான தகவல்கள் தெரியவில்லை என்றும் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிரச்சனை காரணமாக இதற்காகத்தான் கொலை நடந்திருக்கலாம் என்று கருதுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இருவரது உடல்களும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இளம்பெண் பவ்யாவின் உடலை வாங்கிச் செல்வதற்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அவரது உறவினர்கள் வருகை தந்துள்ளனர். 2 குடும்பத்தினரும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கண்ணீர் மல்க காட்சியளித்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com