மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் கிளை அதிரடி

பதில் மனு தாக்கல் குறித்து மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.அபராத தொகையை மதுரை மாநகராட்சியின் பொது நிதிக்காக வழங்க வேண்டும்.
மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் கிளை அதிரடி
Published on

மதுரை:

மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா பகுதியில் எனக்கு சொந்தமான நிலத்தில் 2,224 சதுரஅடி நிலத்தினை வைகை ஆறு திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தினர்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கையகப்படுத்தப்பட்ட எனது நிலத்திற்கு பதிலாக இழப்பீட்டு தொகை அல்லது மாற்றிடம் வழங்க கோரி தொடர்ந்து பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே எனது நிலத்தை கையகப்படுத்தியதற்காக மாற்று நிலம் அல்லது உரிய இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் கடந்த 2014-ம் ஆண்டு இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார். 2014-ம் ஆண்டு மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

இறுதிக்கட்ட விசாரணைக்காக இந்த ஆண்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் சம்பந்தப்பட்ட நிலம் பட்டா நிலமா? இல்லையா? அல்லது மனுதாரரின் மனு பரிசீலனை செய்யப்பட்டதா? இல்லையா? அல்லது மனுதாரர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் முறையாக கையகப்படுத்தப்பட்டதா? அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு அவர்களுக்கான அறிவிப்பு முறையாக வழங்கப்பட்டதா..? உள்ளிட்ட எந்த தகவலையும் தெரிவிக்காததால் இந்த வழக்குக்கு தீர்வு காண இயலவில்லை.

மதுரை மாநகராட்சி கமிஷனரின் இத்தகைய செயல் ஏற்புடையதல்ல. எனவே மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகையை மதுரை மாநகராட்சியின் பொது நிதிக்காக வழங்க வேண்டும். வழக்கு குறித்து வருவாய் ஆவணங்களுடன் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com