

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் தங்க குதிரையில் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடந்தது. இந்த கண் கொள்ளா காட்சியை காண லட்சக்கணக்கான திரண்டனர். இதனால் அந்த பகுதி முழுக்க விழா கோலம் பூண்டது.
மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 28-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் ஏப்ரல் 29-ஆம் தேதி தோரோட்டமும் நடந்தது.
இந்த நிலையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு அழகர் மலையில் இருந்து கள்ளர் கோலத்தில் தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார். நேற்று அதிகாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் மதுரை மூன்றுமாவடி அருகே கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.
நேற்றிரவு தல்லாங்குளத்தில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள வருகை தந்த கள்ளழகரை வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீரராகவ பெருமாள் வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் இறங்கினார்.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண வந்த பக்தர்களால் மதுரையே விழாக்கோலம் பூண்டது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறுகிறது. மேலும், இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.