

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியது தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். இந்த சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தில் சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு 5 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் சுமார் 1,000 எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி.யில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரி உரிமையாளர்களுக்கு கடந்த சில வருடங்களாக வாடகை பாக்கி வைத்துள்ளது. சுமார் ரூ.50 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைத்து உள்ளது. ஐ.ஓ.சி. நிலுவையில் உள்ள வாடகை தொகையை லாரி உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐ.ஓ.சி நிறுவன உயர் அதிகாரிகளுக்கு தென் மண்டல எல்.பி.ஜி கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை தராவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பி இருந்தது.
அதன்படி இன்று ஐ.ஓ.சி. நிறுவனம் வாடகை பாக்கியை வழங்காததால் இன்று காலை முதல் ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு இயக்கப்படும் 1,000 எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் லோடு ஏற்றாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தொடர்ந்து எல்.பி.ஜி கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த தகவலை தென் மண்டல எல்.பி.ஜி கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
ஏற்கனவே அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த சூழலில் எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலைநிறுத்தம் காரணமாக தென் மாநிலம் முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலை உருவாகியுள்ளது.