

நீலகிரி மாவட்டம் ராஜ்பவன் பகுதியில் மதில் சுவர் மீது சிறுத்தை ஒன்று உலா வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடியதாக கூறப்படும் நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வசிக்கும் பகுதியாக இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை மதில் சுவர் மீது நடமாடும் காட்சி அங்கிருந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ராஜ்பவன் சுற்றுப்புற பகுதிகளில் புதர்கள் மற்றும் மரங்கள் அதிகமாக உள்ளதால், வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இரவு நேர கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன