பல்லடம் அருகே சிறுத்தை நடமாட்டம்- பொதுமக்கள் பீதி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாநகர் பகுதிக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. தற்போது மீண்டும் பல்லடம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி உள்ளதை காணலாம்.
சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி உள்ளதை காணலாம்.
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள நந்தவன தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டபோது அதில் சிறுத்தையின் உருவம் பதிவாகி இருந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நள்ளிரவு நந்தவன தோட்டம் பகுதி வழியாக ஒரு விலங்கு வேகமாக சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நந்தவன குட்டைக்குள் சென்று விட்டது. சந்தேகம் அடைந்து சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தோம். அதில் பதிவான உருவம் சிறுத்தை என்பது தெரிந்தது. குட்டை பகுதியில் சிறுத்தையின் காலடி தடங்கள் காணப்படுகிறது. இவற்றை வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தை இருந்தால் அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். மேலும் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிறுத்தை நடமாட்டம் இருந்தால் அதனை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாநகர் பகுதிக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு அதனை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தற்போது மீண்டும் பல்லடம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com