அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்: எலுமிச்சை கிலோ ரூ.200 ஆக அதிகரிப்பு

முக்கிய சாலை சந்திப்புகளில் உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை பழத்துடன் கூடிய சர்பத் கடைகளும் தற்போது அதிகளவில் முளைத்து உள்ளன.
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்: எலுமிச்சை கிலோ ரூ.200 ஆக அதிகரிப்பு
Published on

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரத்தில் கடும் வெயிலின் தாக்கமும், இரவு நேரத்தில் புழுக்கத்தால் வியர்வையாலும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

காலையிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடைகளில் இளநீர், தர்பூசணி, சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் கிர்ணி பழச்சாறு உள்ளிட்டவற்றை வாங்கி குடித்து இளைப்பாறி செல்கின்றனர்.

மேலும் பழச்சாறு கடைகளுக்கும் படையெடுத்து வருகிறார்கள். இதனால் தற்போது பழச்சாறு கடைகளில் காலை முதல் மாலை வரை கூட்டம் அலை மோதுகிறது. முக்கிய சாலை சந்திப்புகளில் உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை பழத்துடன் கூடிய சர்பத் கடைகளும் தற்போது அதிகளவில் முளைத்து உள்ளன.

இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு எலுமிச்சை வரத்து குறைந்து உள்ளதால் அதன் விலை எகிறி உள்ளது. கடந்த வாரம் வரை மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100வரை மட்டுமே விற்கப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது ரூ.180 ஆக அதிகரித்து உள்ளது.

தட்டுப்பாடு காரணமாக வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் எலுமிச்சை பழம் கிலோ ரூ200-ஐ கடந்து விற்கப்படுகிறது.

இதுகுறித்து எலுமிச்சை மொத்த வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக ஆந்திர மாநிலம் கூடூர், ராஜம்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து அதிகஅளவில் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. தினசரி 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் 100டன் வரை எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு குவிந்து வந்த நிலையில் தற்போது உற்பத்தி நடக்கும் ஆந்திராவில் இருந்து வடமாநிலங்களுக்கு அதிகளவிலான எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து பாதியாக குறைந்து விட்டது.

கடந்த சில நாட்களாகவே சுமார் 40 முதல் 50டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் எலுமிச்சை பழங்களின் விலை திடீரென 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

மொத்த விற்பனையில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.150வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை கடையில் ரூ.200 வரை விற்பனை ஆகிறது என்றார்.

இதேபோல் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் சாத்துக்குடி, தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்களின் விற்பனையும் சூடு பிடித்து உள்ளது. மொத்த விற்பனையில் சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.45வரையிலும், தர்பூசணி பழம் ஒரு கிலோ ரூ.22 வரையிலும், கிர்ணி பழம் ஒரு கிலோ ரூ.25வரையிலும் விற்பனை ஆகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com