ரூ.15 கோடி கோகைன் கடத்தல் விவகாரம்-சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பா? கென்யா பெண்ணிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்து மருத்துவ உதவியுடன் "70 போதைப்பொருள் கேப்ஸ்யூல்கள்" வெளியில் எடுக்கப்பட்டன.
Kenya Woman Arrested for Smuggling -Chennai Airport
Published on

எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னைக்கு வயிற்றுக்குள் கோகைன் போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த கென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை சென்னை சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் இருந்து 'எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்' விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கென்யா நாட்டைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவரின் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சந்தேகத்தின் பேரில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அந்தப் பெண் அதற்கு ஒத்துழைக்காமல் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரது உடமைகளை சோதித்ததில் எவ்வித போதைப்பொருளும் சிக்கவில்லை. எனினும் சந்தேகம் வலுத்ததால், அதிகாரிகள் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது அவரது வயிற்றில் ஏராளமான கேப்ஸ்யூல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்து மருத்துவ உதவியுடன் "70 போதைப்பொருள் கேப்ஸ்யூல்கள்" வெளியில் எடுக்கப்பட்டன. அவற்றிற்குள் உயர்தர 'கோகைன்' போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த எடை "850 கிராம்" ஆகும். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.15 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு:

பிடிபட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், அவர் இதற்கு முன்பும் இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார் என்பதும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதும் அம்பலமாகியுள்ளது.

தற்போது அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் யாரிடம் இந்த போதைப்பொருளை ஒப்படைக்க அவர் திட்டமிட்டிருந்தார்? இதன் பின்னணியில் உள்ள உள்ளூர் நெட்வொர்க் எவை? என்பது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும், சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com