

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை, மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் சம்பவம் நடைபெற்று வருகிறது. படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. மீனவர்கள் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என்று தமிழகத்தின் சில தலைவர்கள் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) தலைவர் ராஃப் ஹக்கீம் நல்லெண்ண பயணமாக சென்னை வந்துள்ளார்.
ராஃப் ஹக்கீம் கச்சத்தீவு விவகாரம் குறித்து கூறியதாவது:-
சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவின் இறையாண்மை என்பது ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒரு விவகாரம். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவு விவகாரத்தை எழுப்புவது விவேகமான அணுகுமுறை அல்ல. மோதல் ஏற்படும்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்திற்கு முன்னுரிமை அளித்து அதை உடனடித் தீர்வாகக் கருதுவது புத்திசாலித்தனமான உத்தி அல்ல.
கச்சத்தீவின் நிலை குறித்த எந்தவொரு மறுஆய்வுக்கும் ஐக்கிய நாடுகள் சபையை அணுக வேண்டும் குறிப்பிட்டார். ஏனெனில், இந்தியா அல்லது இலங்கை ஆகிய இரு நாடுகளாலும் சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட கடல் எல்லை கோட்டை தன்னிச்சையாக மாற்றியமைக்க முடியாது.
கச்சத்தீவு மீதான இலங்கையின் இறையாண்மையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச சட்டத்திற்கு புறம்பாக இதை மாற்ற வேண்டுமென்றால், அதைக் கைப்பற்ற ராணுவ ஆக்கிரமிப்பைத்தான் நாட வேண்டியிருக்கும். ஆனால், இந்திய அரசு ஒருபோதும் அத்தகைய செயலில் ஈடுபடாது என்பது நமக்குத் தெரியும். கச்சத்தீவிற்கு, குறிப்பாக அங்குள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் இந்திய குடிமக்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.
இவ்வாறு ஹக்கீம் தெரிவித்துள்ளார்.